பழனி கோவில் பக்தர்களுக்கு வசதிகள்: நிலம் கையகத்திற்கு எதிராக வழக்கு சிறப்பு அமர்விற்கு மாற்றம்
பழனி கோவில் பக்தர்களுக்கு வசதிகள்: நிலம் கையகத்திற்கு எதிராக வழக்கு சிறப்பு அமர்விற்கு மாற்றம்
ADDED : நவ 28, 2025 12:10 AM

மதுரை : பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் பக்தர்களுக்காக நலத்திட்டங்களை செயல்படுத்த, நிலம் கையகப்படுத்த இழப்பீடு வழங்க அறநிலையத்துறையின் நிர்வாக நிதியை பயன்படுத்த பிறப்பித்த அரசாணைக்கு எதிராக தாக்கலான வழக்கு விசாரணையை சிறப்பு அமர்விற்கு மாற்றி உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
சென்னை டி.ஆர்.ரமேஷ் தாக்கல் செய்த மனு:
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்களின் நலனிற்காக நலத்திட்டங்களை செயல்படுத்த, 58 ஏக்கர் தனியார் நிலம் கையகப்படுத்தப்படும்.
அதிகாரம் இல்லை
நிலத்திற்கு இழப்பீடு மதிப்பு 58 கோடியே 54 லட்சத்து 63 ஆயிரத்து 724 ரூபாய். இது, அறநிலையத்துறையின் நிர்வாக நிதியிலிருந்து வழங்கப்படும்.
இத்திட்டத்தின்படி தடையில்லா மின்சாரம் வழங்க துணை மின் நிலையம், குளியலறை, கழிப்பறை, மருத்துவ வசதிகளுடன் கூடிய தங்குமிடம், பக்தர்கள் சமையல் செய்து உணவருந்தி, ஓய்வெடுக்க தங்குமிடம், கட்டணமில்லா வாகன நிறுத்துமிடம், விழாக் காலங்களில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பழனி பைபாஸ் ரோட்டிலிருந்து கிரி வீதி மற்றும் சுற்றுலா பஸ் ஸ்டாண்ட் வரை சர்வீஸ் ரோடு அமைக்கப்படும்.
இதன் அடிப்படையில் மேல் நடவடிக்கையை கமிஷனர் தொடரலாம் என அறநிலையத்துறை முதன்மை செயலர் 2022 டிச., 26ல் உத்தரவிட்டார். இது அறநிலையத்துறை சட்டத்திற்கு புறம்பானது. குறிப்பிட்ட நோக்கங்களுக்காக மட்டுமே நிதியை செலவிட சட்டம் அனுமதிக்கிறது.
நிலம் கையகப்படுத்த அனுமதியளிக்க அறநிலையத்துறை செயலருக்கு சட்டப்படி அதிகாரம் இல்லை.
அரசு நிதி
சட்டத்தில் அனுமதிக்கப்படாத நோக்கங்களுக்காக, நிர்வாக நிதியை பயன்படுத்த முடியாது. துணைமின் நிலையம், சர்வீஸ் ரோடு அமைத்தல் போன்ற பொது பயன்பாட்டிற்குரியவற்றிற்கு அரசு நிதியை செலவிட வேண்டும்.
கோவில் நிதியில் பணியை மேற்கொள்ளக்கூடாது. அரசாணையை செயல்படுத்த இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். அரசாணையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது.
மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன் ஆஜரானார்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கையகப்படுத்தப்பட்ட நிலம் மாநில அரசின் வசம் உள்ளது. அரசு இழப்பீடு வழங்கி விட்டு, நிலத்தை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்து விட்டு, தொகையை கோவில் நிர்வாகத்திடம் வசூலிக்கலாமா என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும்.
இது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சிறப்பு அமர்வில் நிலுவையில் உள்ளது. அத்துடன் சேர்த்து விசாரிக்க இவ்வழக்கு சிறப்பு அமர்விற்கு மாற்றப்படுகிறது.
இவ்வாறு உத்தர விட்டனர்.

