பட்டா மாறுதல் நடவடிக்கைகளை அதிகாரிகள் கண்காணிக்க வசதி
பட்டா மாறுதல் நடவடிக்கைகளை அதிகாரிகள் கண்காணிக்க வசதி
ADDED : நவ 20, 2024 10:43 PM
சென்னை:பத்திரப்பதிவு நாளிலேயே, தானியங்கி முறையில், பட்டா பெயர் மாற்றம் செய்வதை, தினசரி கண்காணிக்க, பதிவுத்துறை நடவடிக்கை எடுத்து உள்ளது.
தமிழகத்தில் சொத்து பரிமாற்றத்துக்கான பத்திரங்கள், சார் பதிவாளர் அலுவலகத்தில், பதிவு செய்யப்படுகின்றன. பதிவாகும் பத்திரங்களில், சம்பந்தப்பட்ட சொத்துக்கள், முந்தைய உரிமையாளர் பெயரில் இருந்து, புதிய நபர் பெயருக்கு முழுமையாக மாற, சர்வே எண் உட்பிரிவு தேவைப்படாது.
இத்தகைய சொத்துக்கள் தொடர்பான பட்டாக்களில் பெயர் மாற்ற, மக்கள் முன்பு தாலுகா அலுவலகங்களில், தனியாக விண்ணப்பித்தனர். இதற்கு தீர்வாக, தானியங்கி முறையில், பத்திரப்பதிவு விபரங்கள் அடிப்படையில், பட்டா பெயர் மாற்றும் திட்டம் உருவாக்கப்பட்டது.
கடந்த, 2020ல் இத்திட்டம் பரவலாக்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி, அனைத்து தாலுகாக்களுக்கும், இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பத்திரப்பதிவின் போது, சார் - பதிவாளர் நிலையில், இதற்கான சரி பார்ப்பு முடிக்கப்படும்.
இதைத் தொடர்ந்து, 'ஆட்டோ மியூட்டேஷன்' எனப்படும் தானியங்கி முறையில், பட்டா பெயர் மாற்றம் செய்யப்படும்.
வருவாய்த் துறையின், 'தமிழ் நிலம் சாப்ட்வேரில்' இதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. பதிவுத்துறையில், 'ஸ்டார் 2.0 சாப்ட்வேர்' வாயிலாக, சார் - பதிவாளர்கள் இதற்கான பணிகளை செய்யலாம்.
இதில், சரிபார்ப்பு முடிந்தும், பலருக்கு பட்டா பெயர் மாற்றம் நடக்கவில்லை என, புகார் எழுந்தது. இதற்கு தீர்வு காண, பதிவுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது குறித்து பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தானியங்கி முறையில், பட்டா பெயர் மாற்ற பணிகளை, விரைவாக செய்ய வேண்டும் என, நில அளவை மற்றும் நில வரி திட்டத் துறை இயக்குனர் சமீபத்தில் உத்தரவிட்டார். இதன் அடிப்படையில், தானியங்கி பட்டா மாறுதல் பணிகளை கண்காணிக்க, சிறப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை, தமிழ் நிலம் இணையதளத்தில், வருவாய்த் துறை அதிகாரிகள் மட்டுமே, இந்த விபரங்களை பெறக்கூடிய சூழல் இருந்தது. தற்போது, பதிவுத்துறை அதிகாரிகளும், தினசரி எத்தனை பட்டாக்களுக்கு, தானியங்கி முறையில் மாறுதல் செய்யப்பட்டது என்பதை பார்க்க முடியும்.
ஒவ்வொரு சார் - பதிவாளர் அலுவலகத்திலும், கோப்புகள் நிலை என்ன என்பதை, இனி பதிவுத்துறை அதிகாரிகள் கண்காணிக்க முடியும். இதனால், பதிவுத்துறை நிலையில், பட்டா மாறுதலுக்கு எந்த தாமதமும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

