பைசல் ரஹ்மான் டைரி சிக்கியது கூட்டாளிகளுக்கு என்.ஐ.ஏ., வலை
பைசல் ரஹ்மான் டைரி சிக்கியது கூட்டாளிகளுக்கு என்.ஐ.ஏ., வலை
ADDED : அக் 18, 2024 03:13 AM
சென்னை:சென்னையில் கைதான, 'ஹிஸ்ப் உத் தஹ்ரீர்' பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவரிடம் கைப்பற்றிய, ரகசிய டைரியில் உள்ள தகவல்கள் அடிப்படையில், அவரது கூட்டாளிகளை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
'ஹிஸ்ப் உத் தஹ்ரீர்' என்ற பயங்கரவாத அமைப்புக்கு, மத்திய அரசு தடை விதித்தது. தமிழகத்தில், இந்த அமைப்புக்கு ஆட்கள் சேர்த்து, அவர்களுக்கு பயங்கரவாத பயிற்சி அளித்தது தொடர்பாக, சென்னை அண்ணா பல்கலை முன்னாள் கவுரவ பேராசியர் டாக்டர் ஹமீது உசேன் உட்பட, ஏழுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
அக்., 10ம் தேதி, சென்னை தரமணியில், முக்கிய குற்றவாளியான பைசல் ரஹ்மான் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, அவரது ரகசிய டைரி சிக்கியது.
இது குறித்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கூறியதாவது:
ஹிஸ்ப் உத் தஹ்ரீர் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்ப்பது மற்றும் ரகசிய கூட்டங்கள் நடத்துவது போன்றவற்றில், பைசல் ரஹ்மான் முக்கிய புள்ளியாக செயல்பட்டுள்ளார். பாகிஸ்தான் ராணுவத்துடன் ரகசிய தொடர்பில் இருந்துள்ளார்.
அவர் தமிழகம் முழுதும் பயணித்து, மாவட்டத்திற்கு, 10 பேர் என, பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்த்துள்ளார். அவர்களுக்கு ஆயுத பயிற்சியும் அளித்துள்ளார். அதற்கான ஆதாரங்கள் ரகசிய டைரியில் உள்ளன. அதில் உள்ள தகவல்கள் அடிப்படையில், பைசல் ரஹ்மானின் கூட்டாளிகளை தேடி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.