'மத்திய அரசு திட்டங்கள்' பெயரில் போலி விளம்பரம்: ஏமாறும் மக்கள்
'மத்திய அரசு திட்டங்கள்' பெயரில் போலி விளம்பரம்: ஏமாறும் மக்கள்
ADDED : டிச 27, 2024 02:11 AM

திருப்பூர்:சமூக வலைதளங்களில் போலி விளம்பரங்களை வெளியிட்டு, மக்களிடம் இருந்து பணத்தை சுருட்டும் மோசடி செயலில் பலர் ஈடுபட்டுள்ளனர். மக்களை கவனமாக இருக்குமாறு சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். இருப்பினும், மோசடி கும்பல் புதுப்புது வடிவில் ஏமாற்றி வருகிறது.
தற்போது சமூக வலைதளங்களில், 'மந்திரக் கிளியை தொட்டால் கேஷ் பேக் கிடைக்கும்' என்ற விளம்பரம் வேகமாக பரவி உள்ளது.
அதை தொடும் போது, பிரதமரின் புகைப்படம், மத்திய அரசின் 'லோகோ'வுடன், பாரத் ஜன்தன் யோஜனா வாயிலாக, பா.ஜ., கட்சியில் இருந்து, இந்திய மக்கள் அனைவருக்கும், ஒவ்வொருவரின் கணக்கில், 5,000 ரூபாய் வரை இலவசம் என்ற வாசகம் தாங்கிய விளம்பரம் வருகிறது. ஆனால், இது போலி விளம்பரம்.
பா.ஜ.,வினர் கூறுகையில், 'இது போன்ற விளம்பரம் கட்சியில் இருந்து வெளியிடப்படுவதில்லை. இதே போல, போலி விளம்பரங்கள் நிறைய உலா வருகின்றன.
'இவற்றை நம்பி பலர் பணத்தையும் இழக்கின்றனர். இவற்றை வெளியிடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

