போலி துாதரக சான்று: மூவரின் எம்.பி.பி.எஸ்., 'சீட்' ரத்து
போலி துாதரக சான்று: மூவரின் எம்.பி.பி.எஸ்., 'சீட்' ரத்து
ADDED : நவ 22, 2024 11:59 PM
சென்னை:போலி துாதரக சான்றிதழ்கள் சமர்ப்பித்து, என்.ஆர்.ஐ., என்ற, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ், எம்.பி.பி.எஸ்., இடங்கள் பெற்ற மூன்று பேரின் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது.
மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கை குழு வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, வெளிப்படை தன்மையுடன் நடந்து வருகிறது. எந்தவிதமான முறைகேடுகளும் நிகழாத வகையில், பல்வேறு நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்து வருகிறது.
மருத்துவ மாணவர் சேர்க்கையில், மாணவர்கள் சமர்ப்பித்த சான்றிதழ்களை ஆய்வுக்கு உட்படுத்தி சரிபார்ப்பது வழக்கம்.
அதன்படி, சான்றிதழ்களின் உண்மை தன்மையை ஆய்வு செய்ததில், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்திருந்த, ஆறு பேரின் துாதரக சான்றிதழ்கள் போலியானவை என்பது கண்டறியப்பட்டது.
அதில், மூன்று பேர் எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கான ஒதுக்கீடு பெற்றிருந்ததால், அந்த ஒதுக்கீட்டு ஆணை ரத்து செய்யப்பட்டு உள்ளது.
விண்ணப்பித்த ஆறு பேரும், மருத்துவ கவுன்சிலிங்கில் இனி பங்கேற்க முடியாதபடி தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
ரத்து செய்யப்பட்ட மூன்று எம்.பி.பி.எஸ்., இடங்கள், நாளை மறுதினம் நடக்கும் சிறப்பு கவுன்சிலிங்கில் சேர்க்கப்படும். போலி சான்றிதழ் அளித்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது, சட்டரீதியான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.