3 ஆண்டுகளாக கிளினிக் நடத்திய போலி பெண் டாக்டர் கைது
3 ஆண்டுகளாக கிளினிக் நடத்திய போலி பெண் டாக்டர் கைது
ADDED : மே 09, 2025 02:40 AM

பெரம்பலுார்:பெரம்பலுார் அருகே, மருத்துவம் படிக்காமல், கிளினிக் நடத்தி மூன்று ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வந்த, போலி பெண் டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலுார் மாவட்டம், இரூர் மெயின் ரோட்டில், ஒரு வீட்டில் மருத்துவம் படிக்காத பெண் ஒருவர், கிளினிக் வைத்து சிகிச்சை அளிப்பதாக, பெரம்பலுார் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் அலுவலகத்துக்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து, இணை இயக்குனர் டாக்டர் மாரிமுத்து தலைமையிலான மருத்துவக்குழுவினர், திடீர் ஆய்வு செய்தனர்.
அப்போது, கிளினிக்கில் பெண் ஒருவர், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்தார். அந்த பெண்ணிடம், அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அந்த பெண் அதே பகுதியைச் சேர்ந்த முத்துலட்சுமி, 62, என்பதும், பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு, கடந்த மூன்றாண்டுகளாக கிளினிக் நடத்தி, நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதும் தெரியவந்தது.
இதுதொடர்பாக, மாரிமுத்து, பாடாலுார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து, முத்துலட்சுமியை நேற்று கைது செய்தனர். டாக்டர் மாரிமுத்து அந்த கிளினிக்கை பூட்டி சீல் வைத்தார்.