குமுளி மலைப்பாதையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு; ஐயப்ப பக்தர்கள் வாகனங்கள் கம்பம் மெட்டு வழியாக அனுப்பிவைப்பு
குமுளி மலைப்பாதையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு; ஐயப்ப பக்தர்கள் வாகனங்கள் கம்பம் மெட்டு வழியாக அனுப்பிவைப்பு
ADDED : டிச 14, 2024 07:52 AM

கூடலுார் : குமுளி மலைப்பாதையில் மரங்கள் சாய்ந்து மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஐயப்ப பக்தர்கள் வாகனங்கள் கம்பம் மெட்டு வழியாக அனுப்பப்பட்டது.
தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. குமுளி மலைப்பாதையில் உள்ள இரைச்சல் பாலத்திற்கும், பழைய போலீஸ் சோதனை சாவடிக்கும் இடையில் நேற்று காலை தேக்கு மற்றும் மூங்கில் மரங்கள் ரோட்டின் குறுக்கே சாய்ந்தன. ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் கம்பம் மெட்டு வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டன.
தொடர்ந்து மழை பெய்து வந்ததால் சாய்ந்த மரங்களை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது. காலை 10:00 மணிக்கு மரங்களை அகற்றும் பணி துவங்கியது. 11:00 மணிக்கு முழுமையாக அகற்றியவுடன் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.
சபரிமலை சீசன் காரணமாக ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் அதிகமாக இவ்வழியே சென்று திரும்புகின்றன. மரங்கள் சாய்ந்த நேரத்தில் போக்குவரத்து இல்லாததால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் குமுளி மலைப் பாதையில் கவனமாக செல்ல டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வனத்துறையினரும் தேசிய நெடுஞ்சாலைத் துறையினரும் போலீசாருடன் இணைந்து மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

