போலீசாரை 'ரிமாண்ட்' செய்ய விடிய விடிய ஆவணங்கள் தயாரிப்பு; ஸ்டேஷனை முற்றுகையிட்ட குடும்பத்தினர்
போலீசாரை 'ரிமாண்ட்' செய்ய விடிய விடிய ஆவணங்கள் தயாரிப்பு; ஸ்டேஷனை முற்றுகையிட்ட குடும்பத்தினர்
UPDATED : ஜூலை 02, 2025 03:38 AM
ADDED : ஜூலை 02, 2025 01:54 AM

திருப்புவனம்:சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே விசாரணைக்கு சென்ற வாலிபர் உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட போலீசாரை, 'ரிமாண்ட்' செய்ய விடிய விடிய ஆவணங்களை, ஏ.டி.எஸ்.பி., சுகுமார் தலைமையில் தயாரித்தனர்.
பிரேத பரிசோதனைக்கு பின், கொலை வழக்காக மாற்றப்பட்டு, குற்றப்பிரிவு போலீசார் ஐந்து பேரை கைது செய்தனர். விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஏ.டி.எஸ்.பி., சுகுமார் தலைமையில் கைது செய்யப்பட்ட ஐந்து போலீசாரையும், திருப்புவனம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
காவல் நிலையத்தில் உள்ள அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டன. மாடியில் மட்டும் விளக்கு வெளிச்சத்தில் நள்ளிரவு 1:00 மணி முதல் காலை 4:00 மணி வரை ஆவணங்கள் தயாரித்தனர். திருப்புவனம் நகர் முழுதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
நீதிபதி வீட்டிற்கு அதிகாலையிலேயே அழைத்துச் சென்று ஆஜர்படுத்த திட்டமிட்டனர். இதற்காக, காவல் நிலையத்தின் முன்புற விளக்குகள் உள்ளிட்ட அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டன. ஐந்து பேருக்கும் திருப்புவனம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
காலை 8:00 மணிக்கு திருப்புவனம் நீதிமன்றத்தில், மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் முன்னிலையில், ஐந்து பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை, 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து, மதுரை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட போலீசாரின் உறவினர்கள், திருப்புவனம் காவல் நிலையம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். உயர் அதிகாரிகளின் உத்தரவிற்கு ஏற்ப தான், போலீசார் செயல்பட்டதாகவும், தனிப்பட்ட முறையில் விசாரணை மேற்கொள்ளப்படவில்லை எனவும் கூறினர். கைது செய்யப்பட்ட போலீசாரை நம்பி மனைவி, குழந்தைகள், தாய், தந்தை உள்ளனர் என, கண்ணீர் விட்டு கதறினர்.
மானாமதுரை டி.எஸ்.பி., சண்முகசுந்தரம், அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்திற்கு நேற்று காலை ஆறுதல் சொல்ல, பா.ம.க., மாநில பொருளாளர் திலகபாமா வந்தபோது, கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் வருகைக்காக, மானாமதுரை எம்.எல்.ஏ., தமிழரசியும் அங்கு காத்திருந்தார்.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடந்த மரணங்களை சம்பந்தப்படுத்தி, முதல்வர் ஸ்டாலினை குறை கூறி, திலகபாமா பேசினார். அதற்கு எம்.எல்.ஏ., தமிழரசி எதிர்ப்பு தெரிவித்ததுடன், 'துக்க வீட்டில் அரசியல் பேசாதீர்கள்' என கண்டித்தார்.
திலகபாமா நீண்ட நேரம் அஜித்குமார் வீட்டில் இருந்ததால், அமைச்சர் பெரியகருப்பன் வருகை மதியத்திற்கு மாற்றப்பட்டது.