ADDED : ஆக 23, 2025 02:27 AM
செய்யூர்: 'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் தமிழகம் முழுதும் பிரசார சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் அ.தி. மு.க., பொதுச்செயலர் பழனி சாமி, நேற்று செய்யூரில் மக்களிடம் பேசியதாவது:
கொரோனா காலத்தில் ரேஷன் கடையில் விலையில்லா பொருட்கள் ஓராண்டுக்கு அ.தி.மு.க., ஆட்சியில் கொடுத்தோம். ரூ.1000 பணமும் கொடுத்தோம்.
பொருளாதார சூழலால் ஏழைப் பெண்களின் திருமணம் தடைபட்டு விடக் கூடாது என்பதற்காக திருமண உதவித் திட்டம் வாயிலாக ரூ.50 ஆயிரம் கொடுத்தோம். தாலிக்குத் தங்கம் திட்டம் மூலம் ஒரு பவுன் தங்கம் 6 லட்சம் பேருக்குக் கொடுத்தோம். இவை அனைத்தையும் தி.மு.க., அரசு நிறுத்தி விட்டது.
கடும் பாதிப்பு தைப்பொங்கலுக்கு வேட்டி சேலை கொடுப்பதற்கான, கொள்முதலில் பெரும் முறைகேட்டை செய்துள்ளது தி.மு.க., அரசு. அது குறித்து, அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும் தீவிரமாக விசாரிக்கப்படும்.
விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. அதைக் கட்டுப்படுத்த தி.மு.க., அரசால் முடியவில்லை. ஏழை மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இது பற்றி முதல்வர் ஸ்டாலினுக்கு எந்தக் கவலையும் இல்லை.
அவரது திருமண நாளை, கூட்டணி கட்சித் தலைவர்களை வரவழைத்து கொண்டாடுவதுதான் முக்கியமாக இருக்கிறது. அவருடைய கட்சியும், குடும்பமும் நன்றாக இருந்தால் போதும் என நினைக்கும் ஒரு முதல்வரைப் பெற்றிருக்கிறோம்.
அ.தி.மு.க., ஆட்சியில் விலைவாசி உயரும்போது விலை கட்டுப்பாட்டு நிதி என்று ரூ.100 கோடி நிதி ஒதுக்கினோம்.
அதன் வாயிலாக, அண்டை மாநிலங்களில் எங்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கிறதோ, அங்கிருந்து கொள்முதல் செய்து, கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக தமிழகத்தில் சகாய விலையில் பொருட்களை மக்களுக்குக் கொடுத்தோம்.
நாடகம் கொரோனா காலத்தில் விலை மதிக்க முடியாத உயிர்களைக் காப்பாற்றியதற்கு பிரதமரே பாராட்டினார். அ.தி.மு.க., ஆட்சியில் எல்லா துறைகளுமே சிறப்பாக செயல்பட்டது. அதற்காக, நுாற்றுக்கணக்கான விருதுகளைப் பெற்றோம்.
ஆனால், தி.மு.க., ஆட்சியில் எதுவுமே இல்லை. 100 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும் என்ற ஸ்டாலின், சம்பளமும் உயர்த்தப்படும் என்றார். ஆனால், இப்போது 100 நாள் வேலைத்திட்டம் 50 நாளாக சுருங்கிவிட்டது. சம்பளமும் ஒழுங்காக கொடுக்கவில்லை.
'உங்களுடன் ஸ்டாலின்' என்று வீடுவீடாக அதிகாரிகள் செல்கின்றனர். மக்களிடம் இருக்கும் 46 பிரச்னைகள் பற்றி மனு கொடுத்தால், அதை நிறைவேற்றுவார்களாம். மக்களுக்கு 46 பிரச்னைகள் இருக்கிறது என்பதே, தமிழக அரசுக்கு இப்போதுதான் தெரிந்திருக்கிறது.
தேர்தலுக்குள் இன்னும் என்னவெல்லாம் நாடகம் போடப் போகிறதோ, தி.மு.க., அரசு?
இவ்வாறு அவர் பேசினார்.