ADDED : ஆக 27, 2025 05:44 AM
பெரம்பலுார்: த.வெ.க., தலைவர் விஜய், அவருடைய பவுன்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க, பெரம்பலுார் எஸ்.பி., அலுவலகத்தில் ரசிகர் புகார் கொடுத்துள்ளார்.
பெரம்பலுார் மாவட்டம், குன்னம் அருகே பெரியம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மகன் சரத்குமார், 24, என்பவர், நேற்று தன் தாய் சந்தோஷம் என்பவருடன் வந்து, பெரம்பலுார் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
நான் பெரியம்மாபாளையம் கிராமத்தில் கணவரை இழந்த தாயுடனும், பாட்டியுடனும், சகோதரியுடனும் வசிக்கிறேன்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில், மதுரையில் நடந்த மாநாட்டில் பங்கேற்க கடந்த, 21ல் சென்றேன். மாநாட்டில் முன் வரிசையில் நான் நின்று கொண்டிருந்தேன். அப்போது, தலைவர் விஜய், நடைமேடையில் நடந்து வந்தார். தலைவரை பார்த்தவுடன் ஆர்வத்தில் நடைமேடையில் ஏறினேன். உடனே, தலைவர் விஜய் முன்னிலையில் பாதுகாப்பு பவுன்சர்கள் இரண்டு பேர், என்னை துாக்கி கீழே வீசினர்.
இதில் என் வலது மார்பக விளா எலும்பு அடிபட்டு, வலி அதிகமாக உள்ளது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கிறேன்.
இதுகுறித்து, கட்சித் தலைமை பேசுவதாகக் கூறி, தமிழக வெற்றிக்கழக பெரம்பலுார் மாவட்ட பொறுப்பாளர்கள், என்னிடம் சமரசம் பேசி, கட்சிக்கு எதிராக பேசாமல் பார்த்துக் கொண்டனர். எவ்வித முதலுதவியும் செய்யவில்லை.
தற்போது, நெஞ்சு வலி அதிகமாகி உள்ளது. விஜய் மீதும், அவருடைய பவுன்சர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.