ADDED : ஜூலை 22, 2026 12:28 AM

சென்னை : 'ரயில் ஒன்' செயலியில், தற்போது வழங்கப்பட்டு வரும், 3 சதவீத கட்டண சலுகையை, அடுத்த ஆண்டு மார்ச் வரை, ரயில்வே நீட்டித்துள்ளது.
இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ரயில் டிக்கெட் முன்பதிவு உட்பட பல்வேறு சேவைகளை, 'ஆன்லைனில்' பெறும் வகையில், 'ரயில் ஒன்' செயலி, கடந்த ஆண்டு ஜூலையில் தொடங்கப்பட்டது. இதுவரை 2.57 கோடிக்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். தினமும் 7.64 லட்சம் டிக்கெட்டுகள், இந்த செயலி வாயிலாக எடுக்கப்படுகின்றன.
ரயில் முன்பதிவு டிக்கெட், சாதாரண டிக்கெட், நடைமேடை டிக்கெட், பி.என்.ஆர்., ஸ்டேட்டஸ், ரயில் எங்கு வருகிறது என்பது உள்ளிட்ட ஒருங்கிணைந்த சேவைகளை, இந்த செயலி வாயிலாக பெற முடியும்.
செயலியில் 'டிக்கெட்' எடுக்கும்போது, 3 சதவீதம் கட்டண சலுகை அளிக்கப்படுகிறது. பயணியரை ஊக்குவிக்கும் வகையில், இந்த சலுகை, வரும் 2027 மார்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மூன்று சதவீதம், 'கேஸ்பேக்' சலுகை, 2028 ஆக., 24ம் தேதி வரை நீட்டித்து வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
