UPDATED : டிச 31, 2024 11:53 PM
ADDED : டிச 31, 2024 11:51 PM

சென்னை : ''தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை இயல்பை விட 33 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது,'' என, வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார். நேற்றுடன் பருவமழை முடிவடைந்தது; பருவக்காற்று, பொங்கலுக்குப்பின் முழுமையாக விலகும் என்றும், அவர் தெரிவித்துள்ளார்.
அவரது பேட்டி:
தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் இறுதி வரையிலான காலகட்டத்தில், 117 செ.மீ., மழை பெய்துள்ளது. இது, 2023ம் ஆண்டைவிட, 15 சதவீதம் அதிகம்.
இதில், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில், 5 செ.மீ.,; மார்ச், ஏப்., மே மாதங்களில், 14; ஜூன் முதல் செப்., இறுதிவரை தென்மேற்கு பருவ காலத்தில், 39 ; அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான, வடகிழக்கு பருவமழை காலத்தில், 59 செ.மீ., என, மொத்தம், 117 செ.மீ., மழை பெய்துள்ளது. இது, 2023ல் பெய்ததைவிட, 14 செ.மீ., அதிகம்.
வடகிழக்கு பருமழை காலத்தில், அக்டோபரில், 21, நவ., 14, டிச., 23 செ.மீ., என மொத்தம், 59 செ.மீ., மழை பெய்துள்ளது. இது இயல்பைவிட, 33 சதவீதம் அதிகம்; 2023ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்ததை விட, 2024ல், 28 சதவீதம் அதிகம்.
தென்மேற்கு பருவமழை காலத்தில், 16 மாவட்டங்களில், இயல்பை விட மிக அதிகமாகவும், 17 மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமாகவும் மழை பெய்துள்ளது. அரியலுார், மயிலாடு துறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களில், இயல்பை விடக் குறைவாக மழை பதிவாகி உள்ளது.
வடகிழக்கு பருவமழை காலத்தில், திருநெல்வேலி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், விழுப்புரம் மாவட்டங்களில், இயல்பைவிட மிக அதிகமாக, 59 சதவீதத்துக்கு மேல் மழை பதிவாகி உள்ளது.
இதேபோல, 23 மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமாகவும், 11 மாவட்டங்களில் இயல்பான அளவிலும், வடகிழக்கு பருவமழை பெய்துள்ளது.
கடந்த ஆண்டு, அரபிக்கடல், வங்கக்கடல் பகுதிகளில், ரெமல், அஸ்னா, டானா மற்றும் பெஞ்சல் புயல்கள் உருவாகின. 2023ல், ஆறு புயல்கள் உருவான நிலையில், 2024ல் புயல்கள் எண்ணிக்கை குறைந்தாலும் மழை அதிகரித்துள்ளது.
காற்றழுத்தத் தாழ்வு நிலை, வளிமண்டல சுழற்சி ஆகியவற்றின் காரணமாக, 2024ல் மழை அளவு அதிகரித்துள்ளது. வங்கக்கடலில் ஏற்பட்ட கிழக்கு அலை மற்றும் இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட எம்.ஜே.ஓ., அமைப்புகளின் தாக்கத்தால் மழைப்பொழிவு அதிகரித்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
பொங்கல் வரை மழை தொடரும்
கணக்கீடு அடிப்படையில், வடகிழக்கு பருவமழை டிசம்பர், 31ல் முடிவடைகிறது. ஆனால், வடகிழக்கு பருவக்காற்று, பொங்கலுக்குப் பிறகே முழுமையாக விலகும் என தெரிகிறது. 2023ல் வடகிழக்கு பருவமழை, அக்., 16ல் துவங்கி, 2024 ஜன., 14ல் விலகியது. கடந்த ஆண்டு அக்டோபர், 15ல் துவங்கியது. இந்த ஆண்டு வரும், 15ம் தேதிக்குப் பின் விலகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த சில நாட்களுக்கு, தமிழகத்தில் சில பகுதிகளில் கனமழை, பல இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஜன., 7க்குப் பின் புதிதாக காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி, மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
அதுகுறித்த முறையான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்.- பாலச்சந்திரன், வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர்