முந்திரி வாரிய தலைவராக அமைச்சர் நியமனம்; விவசாயிகள் -- வியாபாரிகள் கடும் அதிருப்தி
முந்திரி வாரிய தலைவராக அமைச்சர் நியமனம்; விவசாயிகள் -- வியாபாரிகள் கடும் அதிருப்தி
ADDED : செப் 16, 2025 07:11 AM

சென்னை : முந்திரி வாரியத்தின் தலைவராக வேளாண்துறை அமைச்சர் நியமிக்கப்பட்டது, விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் விழுப்புரம், கடலுார், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் முந்திரி சாகுபடி நடந்து வருகிறது.
தமிழக அரசு அனுமதி
இத்தொழிலில், 2.50 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள், தொழிலாளர்கள், 3,000க்கும் அதிகமான மொத்த வியாபாரிகள், 20க்கும் மேற்பட்ட ஏற்றுமதியாளர்கள் உள்ளனர்.
இதனால், பனை வாரியம் போன்று, முந்திரி வாரியம் அமைக்கப்படும் என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, 10 கோடி ரூபாயில் முந்திரி வாரியம் அமைக்க, தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளது.
கடலுாரை தலைமையிடமாக கொண்டு, தமிழக முந்திரி வாரியம் செயல்படும். இதன் தலைவராக, வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் இருப்பார் என அறிவிக்கப் பட்டுள்ளது.
பனைமர தொழிலாளர் நல வாரிய தலைவராக, எர்ணாவூர் நாராயணனை அரசு நியமித்தது. அதேபோல், முந்திரி வாரியத்திற்கு, விவசாயிகள், வியாபாரிகள் அல்லது ஏற்றுமதியாளர்களில் ஒருவரை, தலைவராக அரசு நியமிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், துறை அமைச்சர் நியமிக்கப்பட்டது, விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
நடவடிக்கை இல்லை
இது குறித்து, தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:
'முந்திரி உற்பத்தி மற்றும் விற்பனையில் தன்னிறைவு அடைவதை நோக்கமாக வைத்து, முந்திரி வாரியம் அமைக்கப்பட்டு உள்ளது' என, அரசு அறிவித்துள்ளது. ஆப்ரிக்க நாடுகளில் இருந்து, முந்திரி இறக்குமதி செய்யப்பட்டு, இங்கு பதப்படுத்தப்படுகிறது.
ஐந்து ஆண்டுகளில் முந்திரி சாகுபடி பரப்பை அதிகரிக்க, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் நெருங்குவதால், முந்திரி வாரியம் அறிவிப் பை அரசு வெளியிட்டுள்ளது. அதன் தலைவராக வேளாண் துறை அமைச்சரை நியமித்துள்ளனர்.
இதனால், வாரியத்தில் உள்ள மற்ற அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகளால், ஆக்கபூர்வமான கருத்துக்களை சொல்ல முடியாது. அமைச்சர் சொல்வதை மட்டுமே ஏற்று செயல்பட வேண்டிய நிலை ஏற்படும். வாரியம் என்ற பெயரையே கொச்சைப் படுத்தும் வகையில், அரசு செயல்படுவது வருந்தத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.