விவசாயிகளுக்கு காப்பீடு தொகை வழங்காததால் கடும் அதிருப்தி
விவசாயிகளுக்கு காப்பீடு தொகை வழங்காததால் கடும் அதிருப்தி
ADDED : பிப் 07, 2024 01:31 AM
திருச்சி:தமிழகத்தில், டெல்டா மாவட்டங்கள் உள்பட சம்பா ஒரு போகம் மற்றும் தாளடி நெற்பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய கடந்த ஆண்டு நவ., 15ம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டது.
அதிகளவில் விவசாயிகள் காப்பீடு செய்யவில்லை என்பதால், காலஅவகாசம் ஒரு வாரம் நீடிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் அதிகளவில் விவசாயிகள் பயிர்காப்பீடு செய்தனர்.
இந்நிலையில், கடந்த நவ., 15ம் தேதி வரை பயிர்காப்பீடு செய்தவர்களுக்கு காப்பீடு தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.
அதன்பின், நீடிக்கப்பட்ட காலஅவகாசத்தில் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீடு தொகை வரவில்லை.
இதனால் தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை, 45 ஆயிரம் ஏக்கர் நிலத்துக்கு, 20 ஆயிரம் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திருந்தனர்.
இவர்களுக்கு ஏக்கருக்கு, 9 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வீதம், 8,028 விவசாயிகளுக்கு, 17.24 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் மட்டும், 12 ஆயிரத்துக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு காப்பீடு தொகை வரவில்லை.
இதேபோல், டெல்டா மாவட்டங்களிலும் பல ஆயிரம் விவசாயிகளுக்கு காப்பீடு தொகை வழங்கப்படவில்லை.
காப்பீடு தொகை வழங்கப்படாத விவசாயிகளில் பெரும்பாலானோர், நீடிக்கப்பட்ட காலகட்டத்தில் காப்பீடு செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து விவசாயிகள் வேளாண்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் இன்சூரன்ஸ் அதிகாரிகளை கைகாட்டி உள்ளனர். அவர்களோ, தமிழக அரசை கைகாட்டுகின்றனர்.
இதனால் விவசாயிகள் கடும் விரக்தி அடைந்துள்ளனர்.
ஆகையால், தமிழக அரசு இவ்விஷயத்தில் தலையிட்டு, இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி, விடுபட்ட விவசாயிகளுக்கும் உடனடியாக காப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துஉள்ளது.

