ஏக்கருக்கு ரூ.35,000 நிவாரணம் விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
ஏக்கருக்கு ரூ.35,000 நிவாரணம் விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
ADDED : டிச 06, 2025 01:56 AM
சென்னை: தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ரவீந்திரன், பொதுச்செயலர் நடராஜன் ஆகியோர், தலைமைச் செயலர் முருகானந்தத்தை சந்தித்து, மனு அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது:
வடகிழக்கு பருவமழையால், சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. மழை தொடரும் நிலையில், மறுவிதைப்பு மேற்கொள்ள வழியில்லை.
நீரில் மூழ்கிய பயிர்களுக்கு, ஏக்கருக்கு 8,000 ரூபாய் நிவாரணம் என்பது, விவசாயிகள் அடைந்த பாதிப்பிற்கு ஏற்றதாக அமையாது.
இத்துடன் பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையும் சேர்த்து, ஏக்கருக்கு 35,000 ரூபாய் வழங்க வேண்டும்.
'வரும் 8ம் தேதிக்குள், செயலி வழியே கணக்கெடுத்து, நிவாரணம் வழங்கப்படும்' என, வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். கள நிலவரம், அதற்கு இசைவாக இல்லை.
செயலி முறையை பயன்படுத்தி, பயிர் பாதிப்பு கணக்கீடு செய்வது சாத்தியமில்லை.
அவ்வாறு செய்தால், ஒரு மாதத்திற்கு மேலாகும். உதவி என்பது உடனடியாக வழங்கப்பட வேண்டும். எனவே, வழக்கமான முறையில், பாதிப்பை பார்வையிட்டு கணக்கீடு செய்து, உடனடியாக நிவாரணம் வழங்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

