அரிய வகை விலங்குகள் பாதுகாப்பு திட்டத்தில் நீலகிரி மரநாய் சேர்ப்பு
அரிய வகை விலங்குகள் பாதுகாப்பு திட்டத்தில் நீலகிரி மரநாய் சேர்ப்பு
ADDED : டிச 06, 2025 01:56 AM

சென்னை: 'அழிவின் விளிம்பில் உள்ள அரியவகை விலங்குகள் பாதுகாப்பு நிதி திட்டத்தில், நீலகிரி மரநாய் சேர்க்கப்பட்டுள்ளது' என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில், நீலகிரி உட்பட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில், 'நீலகிரி மார்டின்' எனப்படும் நீலகிரி மரநாய் காணப்படுகிறது. வனப்பகுதிகளில் அரிதாக மட்டுமே, இதை பார்க்க முடியும்.
கீரிப்பிள்ளை போன்ற உருவத்தில், குறிப்பிட்ட சில வேறுபாடுகளுடன், கருப்பு நிறத்தில் இது காணப்படும். மனிதர்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில், அரிதாக மட்டுமே வரும் என்பதால், இதை அடிக்கடி பார்க்க முடியாது.
தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில், எத்தனை மரநாய்கள் உள்ளன என்ற விபரங்கள் தொகுக்கப்படவில்லை. அழியும் அபாயத்தில் உள்ள, நீலகிரி மரநாய் இனத்தை பாதுகாக்க, வனத்துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் அரிதாக காணப்படும் முள்ளெலி போன்ற உயிரினங்களை பாதுகாக்கும் திட்டத்துக்கு, ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில், நீலகிரி மரநாய் சேர்க்கப்பட்டு பாதுகாக்கப்படும் என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

