பிப்., 15 வரை மேட்டூர் நீர் திறப்பு விவசாயிகள் வலியுறுத்தல்
பிப்., 15 வரை மேட்டூர் நீர் திறப்பு விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : ஜன 02, 2024 11:29 PM
சென்னை:'வளர்ந்து வரும் பயிர்கள் கருகாமல் பாதுகாப்பதற்காக, பிப்ரவரி 15ம் தேதி வரை, மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு நீரை திறக்க வேண்டும்' என, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
விவசாயிகள் மிகுந்த சிரமத்தோடு நெல், கரும்பு பயிர்கள் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். நடப்பாண்டிலாவது, நெல் குவிண்டாலுக்கு 3,500 ரூபாய், கரும்பு டன்னுக்கு 5,000 ரூபாய் கொள்முதல் விலையாக வழங்க வேண்டும்.
பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு உள்ளிட்ட பொருட்களுடன் தேங்காய் இணைத்து வழங்கவேண்டும். கடந்த 2021ம்ஆண்டு கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பயிர்கடன் 12, 500 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்காக விவசாயிகள் செலுத்திய டெபாசிட் தொகை 1,200 கோடி ரூபாய் வழங்கப்படாமல் முறைகேடு நடந்து உள்ளது.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் விசாரணை நடத்தி அதனை, விவசாயிகளுக்கு பெற்று தர வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களில் பருவமழையளவு குறைந்துள்ளது.
காவிரி நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், வடகிழக்கு பருவமழையை நம்பி சாகுபடி செய்த 15 லட்சம் ஏக்கர் சம்பா மற்றும் தாளடி பருவ நெல் பயிர்கள் பாதிக்கப்படும் நிலையில் உள்ளன.
எனவே, வளர்ந்து வரும் பயிர்கள் கருகாமல் பாதுகாப்பதற்காக, பிப்ரவரி 15ம்தேதி வரை மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு நீரை திறக்க வேண்டும்.
இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார்.