கள்ளுக்கு எதிராக கருத்து கொந்தளிக்கும் விவசாயிகள்
கள்ளுக்கு எதிராக கருத்து கொந்தளிக்கும் விவசாயிகள்
ADDED : ஜூன் 13, 2025 02:53 AM

பல்லடம்,:'புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வீட்டை முற்றுகை இடுவோம்' என, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இதன் மாநில ஊடகப்பிரிவு செயலர் ஈஸ்வரன் கூறியதாவது:
கிருஷ்ணசாமி, 'கள்' ஆபத்தானது என்றும், கள் பயன்பாட்டுக்கு வந்தால், கள்ளச்சாராயம் அதிகரிக்கும் எனவும் கூறியுள்ளார். முழுக்க தவறான தகவல் தெரிவித்துள்ளார். இவரது கருத்து, கள் தடையை நீக்க போராடிவரும் விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கள்ளுக்கு தடை விதித்து, 34 ஆண்டுகள் ஆகிறது. கள்ளுக்கு தடை இருப்பதாலேயே கள்ளச்சாராயம் பெருகுகிறது. இது தான் உண்மை.
கள் குடித்து ஒருவர் உயிரிழந்தார் என்ற வரலாறு கிடையாது. தென்னை, பனை மரங்களை காப்பாற்ற வேண்டிய சூழலில், விவசாயிகள் உள்ளனர்.
கள் குறித்த கருத்தை கிருஷ்ணசாமி திரும்ப பெற வேண்டும். இல்லையெனில், வரும் 20ம் தேதி, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், ஏர்முனை இளைஞர் அணியும், விவசாயிகளை திரட்டி, கிருஷ்ணசாமி வீட்டை முற்றுகை இடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.