தெரு நாய்கள் கடித்து ஆடுகள் பலியாகும் விவகாரம்; விடிய விடிய விவசாயிகள் போராட்டம்
தெரு நாய்கள் கடித்து ஆடுகள் பலியாகும் விவகாரம்; விடிய விடிய விவசாயிகள் போராட்டம்
ADDED : பிப் 14, 2025 06:56 AM

திருப்பூர்: காங்கேயம் அருகே தெருநாய்கள் கடித்ததால், கால்நடைகள் உயிரிழந்ததற்கு இழப்பீடு கேட்டு, விடிய விடிய விவசாயிகள் சாலையில் படுத்து உறங்கிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம், வெள்ளக்கோவில் தாராபுரம் உள்ளிட்ட இடங்களில் தெரு நாய்களால் ஆடுகள் பலியாவது அதிகரித்து வருகிறது. பலமுறை போராடிய விவசாயிகள் அதிகாரிகளின் வாக்குறுதியை நம்பி போராட்டத்தை கைவிட்டு வந்தனர்.
ஆனால், இதுவரையில் இழப்பீடு பெற்று தருவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், நேற்று காலை துவங்கி காங்கேயம் சென்னிமலை சாலையில் உள்ள பாரவலசில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் காலை முதல் தொடர் சாலை மறியல் போராட்டத்தில் உள்ளனர்.
இரவு குளிரையும் பொருட்படுத்தாமல் சாலையில் படுத்து உறங்கி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். நாய்கள் கடித்து பலியாகும் கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்கும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.