ஜூலை 2க்குள் பணப்பட்டுவாடா விவசாயிகள் போராட்டம் வாபஸ்
ஜூலை 2க்குள் பணப்பட்டுவாடா விவசாயிகள் போராட்டம் வாபஸ்
ADDED : ஜூன் 17, 2025 11:50 PM

சென்னை:தமிழகம் முழுதும் விவசாயிகளிடம் இருந்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் வாயிலாக, நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. தனியாரை நியமித்து நெல் கொள்முதல் செய்த நிலையில், அதற்கான பணத்தை இன்னும் வழங்கவில்லை.
விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய, 800 கோடி ரூபாய் நிலுவை தொகையை, வழங்கக்கோரி, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே இருந்து, நேற்று பேரணியாக சென்று கோட்டையை முற்றுகையிட போவதாக, விவசாயிகள் அறிவித்தனர்.
நேற்று காலை, தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருஙகிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் திரண்டனர். அங்கு வந்த போலீஸ் அதிகாரிகள், விவசாய சங்க நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தினர்.
எழும்பூரில் உள்ள வேளாண் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு, விவசாயிகளை அழைத்து சென்றனர். அங்கு வேளாண் துறை இயக்குநரும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொறுப்பு அதிகாரியுமான முருகேஷ், விவசாயிகளிடம் பேச்சு நடத்தினார். இதையடுத்து போராட்டத்தை கைவிடுவதாக, விவசாயிகள் அறிவித்தனர்.
இதுகுறித்து, தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:
கடந்த மே 26ம் தேதி நடந்த பேச்சின்போது ஏற்பட்ட ஒப்பந்தப்படி 17,500 விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்ய வேண்டி இருந்தது.
இதில், 10,500 விவசாயிகளுக்கு பணம் விடுவிக்கப்பட்டு உள்ளது. மேலும், 7,000 விவசாயிகளுக்கு, ஜூலை 2ம் தேதிக்குள் பணத்தை விடுவிப்பதாக, பொறுப்பு அதிகாரி முருகேஷ் உறுதி அளித்தார். இதை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் வணிகப்பிரிவு பொது மேலாளரும் உறுதி செய்தார்.
அதை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளோம். ஜூலை 2ம் தேதிக்குள், பணத்தை விடுவிக்காவிட்டால், முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக, கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.