ADDED : அக் 11, 2024 11:28 PM
சென்னை:மண்வளத்தை மேம்படுத்துவதற்கான தக்கை பூண்டு, சணப்பை உள்ளிட்ட செடிகளின் விதை கிடைக்காமல், விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
மண்வளத்தை மீண்டும் புத்துயிர் பெறச்செய்ய, தக்கை பூண்டு, சணப்பை உள்ளிட்ட புல் வகை செடிகளை விவசாயிகள் பயிரிடுகின்றனர்.
மூன்று வாரங்களில் இவை அடர்ந்து விடுகிறது. பின்னர் இந்த செடிகளை அப்படியே மடக்கி உழுது, மண்ணிற்கு அடிஉரமாக மாற்றப்படுகிறது.
அதன்பின், எந்த பயிரை சாகுபடி செய்தாலும், விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைக்கும்.
தற்போது, தக்கை பூண்டு, சணப்பை சாகுபடி செய்வதற்கு விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், வேளாண் விரிவாக்க மையங்கள், கூட்டுறவு மற்றும் தனியார் கடைகளில் அவற்றின் கையிருப்பு இல்லை. இதனால், விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து, வேளாண்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தக்கை பூண்டு, சணப்பை பயிரிடுவதற்கான காலம் முடிந்து விட்டது.
'அதனால், விதை கையிருப்பில் இல்லை. வடமாநிலங்களில் இருந்து அவை எடுத்து வரப்படுகிறது. இனி அடுத்தாண்டு தான், அவற்றை கொள்முதல் செய்து, வினியோகம் செய்யப்படும்' என்றார்.

