சன்னரக நெல் கொள்முதல் விலை குறைவு வியாபாரிகளால் விவசாயிகளுக்கு நஷ்டம்
சன்னரக நெல் கொள்முதல் விலை குறைவு வியாபாரிகளால் விவசாயிகளுக்கு நஷ்டம்
ADDED : ஜன 16, 2025 10:06 PM
சென்னை:சன்ன ரக நெல் விலையை தனியார் வியாபாரிகள் மூட்டைக்கு, 300 ரூபாய் வரை குறைத்துள்ளதால், விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர்.
நடப்பாண்டு, சாதாரண நெல் குவின்டால் 2,400 ரூபாய்க்கும், சன்ன ரக நெல் 2,450 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படும் என, தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி, அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், செப்டம்பர் 1 முதல் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், நடப்பாண்டு பி.பி.டி., எனப்படும் சன்ன ரக நெல் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருநெல்வேலி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், சன்ன ரக நெல் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடை துவங்கியுள்ளது.
ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும், சன்ன ரக நெல் கையிருப்பு அதிகரித்து உள்ளது.
இதனால், சன்ன ரக நெல்லுக்கு மார்க்கெட் குறைந்து உள்ளது. இதை காரணம் காட்டி, தனியார் வியாபாரிகள், சன்ன ரக நெல் விலையை குறைத்துள்ளனர்.
இதனால், நஷ்டத்தில் நெல் மூட்டைகளை விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து, தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:
நேரடி நெல் கொள்முதல் மையங்களில் 40 கிலோ மூட்டையாகவும், தனியார் வியாபாரிகள் 60 கிலோ மூட்டையாகவும் நெல் கொள்முதல் செய்கின்றனர்.
கடந்தாண்டு தனியார் வியாபாரிகள், 1,600 ரூபாய்க்கு சன்ன ரக நெல் மூட்டை வாங்கினர். தற்போது 1,300 ரூபாய்க்கு கொள்முதல் செய்கின்றனர்.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை விட, 100 ரூபாய்க்கு மேல் கொள்முதல் விலை குறைக்கப்பட்டு உள்ளது.
பண்டிகை காலம் என்பதால், பண தேவைக்காக பல விவசாயிகள், தனியாரிடம் குறைந்த விலைக்கு நெல் மூட்டைகளை விற்று, நஷ்டம் அடைந்து வருகின்றனர்.
வரும் நாட்களில் அதுபோன்ற நிலை ஏற்படாமல், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளிடம் குறைந்த விலையில் கொள்முதல் செய்த நெல்லை, மொத்த வியாபாரிகள், வழக்கமான விலைக்கு அரிசி ஆலைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இதை அரசு கண்காணிக்க வேண்டும். நெல் கொள்முதலை அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும். விவசாயிகள் அடுத்த போகம் சாகுபடி செய்வதற்கு உதவ வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.