தோட்டக்கலை பயிர்கள் காப்பீட்டிற்கு ரூ.85 கோடி ஒதுக்கீடு குறைவு என விவசாயிகள் அதிருப்தி
தோட்டக்கலை பயிர்கள் காப்பீட்டிற்கு ரூ.85 கோடி ஒதுக்கீடு குறைவு என விவசாயிகள் அதிருப்தி
ADDED : ஏப் 18, 2025 11:38 PM
சென்னை:தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி பரப்பு அதிகரித்து வரும் நிலையில், பயிர் காப்பீடு மானியம் குறைவாக ஒதுக்கப்பட்டிருப்பது, விவசாயிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் நெல் உள்ளிட்ட உணவு தானியங்கள்; பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், சிறுதானியங்கள் என வேளாண் பயிர்கள்; காய்கறி, பழம், கீரை வகைகள், நறுமணப் பயிர்கள் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
வேளாண் பயிர்கள் சாகுபடிக்கு, அதிக நீர் தேவை என்பதால், தோட்டக்கலை பயிர் சாகுபடியை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மத்திய, மாநில அரசுகள் நிதியில், பல்வேறு மானிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதனால், சாகுபடி பரப்பு அதிகரித்து வருகிறது. தற்போது மாநிலம் முழுதும், 39 லட்சம் ஏக்கரில், தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.
15 தோட்டக்கலை பயிர்
இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் வருவாய் இழப்பில் இருந்து விவசாயிகளை பாதுகாக்க, மத்திய, மாநில அரசுகள் இணைந்து, பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.
பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில், வேளாண் பயிர்களுக்கு காப்பீட்டு மானியம் வழங்க, 841 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
வாழை, கத்தரி, வெண்டைக்காய், கோஸ், கேரட், தேங்காய், கொத்தமல்லி, பூண்டு, இஞ்சி, வெங்காயம், உருளை, மிளகாய், தக்காளி, மரவள்ளி, மஞ்சள் ஆகிய, 15 தோட்டக்கலை பயிர்களுக்கு, காப்பீடு செய்யப்படுகிறது.
இதற்கு மானியம் வழங்க, 85.3 கோடி ரூபாய் மட்டும், அரசால் ஒதுக்கப்பட்டு உள்ளது. இது, விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட விவசாய சங்கத் தலைவர் ஜெ.ஆஞ்சநேயலு கூறியதாவது:
வேளாண் பயிர்களுக்கு இணையாக, தோட்டக்கலை பயிர்களும், இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படுகின்றன. எனவே, அனைத்து தோட்டக்கலை பயிர்களையும் காப்பீடு திட்டத்திற்குள் கொண்டு வர வேண்டும்.
2 மடங்கு நிதி தேவை
மானியம் குறைத்து ஒதுக்கப்படுவதால், காப்பீடு செய்யும் பரப்பு குறைகிறது. இதனால், பயிர் பாதித்தாலும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைப்பது இல்லை.
இதேநிலை தொடர்ந்தால், தோட்டக்கலை பயிர் சாகுபடியில், விவசாயிகள் ஆர்வம் குறைய வாய்ப்புள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில், இரண்டு ஆண்டுகளாக, பாதித்த தோட்டக்கலை பயிர்களுக்கு, உரிய நிவாரணம் கிடைக்கவில்லை.
எனவே, தோட்டக்கலை பயிர்கள் காப்பீட்டிற்கு, தற்போது ஒதுக்கப்பட்டுள்ளதுபோல், கூடுதலாக இரு மடங்கு நிதியை, அரசு ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.