கொப்பரையை எண்ணெயாக மாற்றி ரேஷனில் விற்க விவசாயிகள் வலியுறுத்தல்
கொப்பரையை எண்ணெயாக மாற்றி ரேஷனில் விற்க விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : ஜன 29, 2024 12:15 AM
ராமநாதபுரம்: மத்திய அரசு கொள்முதல் செய்துள்ள ஒரு லட்சத்து பத்தாயிரம் டன் கொப்பரையை எண்ணெயாக மாற்றி மாநில ரேஷன் கடைகளில் விற்பனைக்கு கொண்டு வர வேண்டும், என தென்னை விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் தேங்காய் விலை வீழ்ச்சியால் தென்னை விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனர். மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம் விவசாயிகளிடம் ஒரு லட்சத்து10 ஆயிரம் டன் கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றுக்கு 108ரூபாய் 90 காசு வீதம் கொள்முதல் செய்துள்ளது. இதனை வெளி மார்க்கெட்டில் கிலோ 60 ரூபாய்க்கு விற்க உள்ளது.
இதனால் தேங்காய் தேவை குறைந்து விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது.
எனவே கேரளா, கர்நாடகா, தமிழக தென்னை விவசாயிகள் மத்திய அரசிடம் கொள்முதல் செய்த கொப்பரையை வெளி மார்க்கெட்டில் விற்க கூடாது என வலியுறுத்தியுள்ளனர்.
தேங்காய் விவசாயிகள் சங்க ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் மணிமாதவன் கூறியதாவது:
மாநில தலைமை மூலம் தமிழக அரசிடம் மத்திய அரசு கொள்முதல் செய்துள்ள கொப்பரையை கொள்முதல் செய்து எண்ணெய் ஆக்கி அதனை ரேஷன்கடைகளில் விற்க வேண்டும்.
இதனை செய்யாவிட்டால் தென்னை விவசாயிகள் தேங்காய்களுக்கு விலை கிடைக்காமல் இன்னும் விலை வீழ்ச்சியினை சந்திக்கும். தற்போது தேங்காய் 5 முதல் 7 ரூபாய் வரை விற்கிறது. கொப்பரை வெளி மார்க்கெட்டுக்கு வந்தால் மேலும் தேங்காய் விலை சரியும், என்றார்.