சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது
சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது
ADDED : செப் 20, 2024 01:45 AM

சென்னை:சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணைய அலுவலகம் முன், 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டனர்.
சுற்றுச்சூழலை காக்க வேண்டிய அதிகாரிகள் அழிப்பதாக குற்றஞ்சாட்டி, அவர்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்; தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்தனர்.
இதையடுத்து, போலீசார் அவர்களை கைது செய்து, சைதாப்பேட்டையில் உள்ள சமுதாயக் கூடத்தில் அடைத்து வைத்தனர்.
போராட்டம் குறித்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநிலத் தலைவர் ஈசன் முருகசாமி கூறியதாவது:
மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணைய அதிகாரிகள், அரசு விதிகளை மதிக்காமல், சுற்றுச்சூழலை அழிக்கும் வகையில், கல், மணல், கிரானைட், சுண்ணாம்பு கல் குவாரிகள் ஆகியவற்றுக்கு, இஷ்டத்திற்கு அனுமதி வழங்கி வருகின்றனர். இதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.
இதன் வாயிலாக, 500 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடுகள் நடந்துள்ளன. லஞ்சம் பெற்று சுற்றுச்சூழலை அழிக்க நினைக்கும் அதிகாரிகளை, உடனடியாக பணியில் இருந்து நீக்க வேண்டும். எங்கள் போராட்டத்தை போலீசார் இன்று முடக்கி விட்டனர். மீண்டும் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.