மயிலாடுதுறை மாவட்டத்தில் கன மழை நெற்பயிர் பாதிப்பால் விவசாயிகள் கவலை
மயிலாடுதுறை மாவட்டத்தில் கன மழை நெற்பயிர் பாதிப்பால் விவசாயிகள் கவலை
ADDED : ஜன 20, 2025 04:19 AM

மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக, 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்ததுடன், வயல்களில் தண்ணீர் தேங்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில், 1 லட்சத்து 69 ஆயிரம் ஹெக்டர் பரப்பில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, செம்பனார்கோவில், சீர்காழி, குத்தாலம் உட்பட மாவட்டம் முழுவதும் பரவலாக நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை வரை கனமழை பெய்தது.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை 6:௦௦ மணி நிலவரப்படி தரங்கம்பாடியில் 117.20 மி.மீ., செம்பனார்கோவிலில் 114.60, மயிலாடுதுறை 104.80, சீர்காழி 50.80, மணல்மேடு 23, கொள்ளிடம் 10.20 மி.மீட்டர் மழை அளவு பதிவாகியது.
ஒரே நாளில் கொட்டி தீர்த்த கன மழையால் தரங்கம்பாடி, திருக்கடையூர், மயிலாடுதுறை, செம்பனார்கோவில், சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் வயலில் மழை நீர் தேங்கியது.
இதனால் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் வயலில் சாய்ந்ததுடன், வயல்களில் தண்ணீர் தேங்கியது.
வடிகால் வசதியின்றி அதிக அளவில் வயல்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், முற்றிய நெற்கதிர்கள் முளை விட தொடங்கிவிடும் என்றும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில் இயந்திரங்களை கொண்டு அறுவடை பணிகள் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.