ADDED : செப் 11, 2025 10:26 PM
சென்னை:திருச்சி, திருவனந்த புரம், லக்னோ, கோழிக்கோடு, அமிர்தசரஸ் ஆகிய ஐந்து விமான நிலையங்களில், 'பாஸ்ட் டிராக் இமிகிரேஷன்' எனும், விரைவான குடியேற்ற சேவை துவக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டில் இருந்து வெளிநாடு செல்லும் பயணியர் மற்றும் அங்கிருந்து இந்தியாவிற்கு வருவோருக்கு, 'இமிகிரேஷன்' எனும் குடியேற்றம் தொடர்பான சோதனை கட்டாயம். இதில், பயணி எங்கிருந்து வருகிறார் என்பதும், அவரின் வருகை குறித்த விபரங்களும் பதிவு செய்யப்படும்.
இப்படி வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருவோரின் குடியேற்ற சேவைக்காக, விமான நிலையங்களில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலை உள்ளது.
இதை கருத்தில் வைத்து, மத்திய அரசு, 'பாஸ்ட் ட்ராக் இமிகிரேஷன் டிரஸ்டட் டிராவலர் புரோக்ராம்' எனும், நம்பகமான பயணியருக்கான விரைவான குடியேற்ற சேவை திட்டத்தை கடந்தாண்டு அறிமுகப்படுத்தியது.
நாட்டிலேயே முதல் முறையாக, கடந்த ஜூனில் டில்லி விமான நிலையத்தில் துவங்கப்பட்ட இந்த திட்டம், பின், சென்னை, கொல்கட்டா, பெங்களூரு, ைஹதராபாத், கொச்சி, ஆமதாபாத் உள்ளிட்ட விமான நிலையங்களில் செயல்பாட்டுக்கு வந்தது.
இந்நிலையில் நேற்று, திருச்சி, லக்னோ, கோழிக்கோடு, திருவனந்தபுரம், அமிர்தசரஸ் ஆகிய ஐந்து விமான நிலையங்களில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, டில்லியில் நேற்று இதை துவக்கி வைத்தார்.