ADDED : நவ 16, 2025 02:04 AM
நாகர்கோவில்: பிளஸ் 2 படித்து வந்த 17 வயது மகளை கர்ப்பமாக்கி குழந்தை பெற்றெடுக்க வைத்த தந்தையை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே செறுகோல் பகுதியைச் சேர்ந்த 45 வயது தேங்காய் வியாபாரிக்கு 17 வயதில் மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். சிறுமி அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் மாணவிக்கு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. அது கேரள மாநிலத்தின் அம்மா தொட்டில் திட்டத்தில் தத்து கொடுக்கப்பட்டது.
மாணவிக்கு 18 வயது பூர்த்தியாகாததால் மருத்துவமனை நிர்வாகத்தினர் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்திய போது தனது காதலன் மூலம் குழந்தை பிறந்ததாக கூறியுள்ளார். ஆனால் காதலனின் பெயரை அவர் சொல்ல மறுத்தார். இதை தொடர்ந்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்திய போது தனது தந்தை தான் கர்ப்பத்துக்கு காரணம் என்றும், வீட்டில் தனியாக இருந்தபோது கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறினார்.தாய்க்கு தெரியாமல் திருவனந்தபுரத்தில் தனியார் மருத்துவமனையில் தன்னை அனுமதித்து குழந்தை பெற வைத்ததையும் ஒப்புக்கொண்டார். இதை தொடர்ந்து தந்தையை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.

