ஆந்திராவில் உண்ணி காய்ச்சல் பாதிப்பு தமிழகத்திலும் பரவுவதால் அச்சம்
ஆந்திராவில் உண்ணி காய்ச்சல் பாதிப்பு தமிழகத்திலும் பரவுவதால் அச்சம்
ADDED : டிச 11, 2025 03:56 AM
சென்னை: ஆந்திராவில் ஒட்டுண்ணிகள் மற்றும் பூச்சிகளால் ஏற்படும் 'ஸ்கிரப் டைபஸ்' என்ற உண்ணி காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திலும் தினசரி ஐந்து முதல் 10 பேர் வரை பாதிக்கப்படுவதால், மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
'ஸ்கிரப் டைபஸ்' என்பது, ஒரு வகை பாக்டீரியா தொற்று. 'ரிக்கட்ஸியா' எனப்படும் பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட ஒட்டுண்ணிகள், பூச்சிகள் உள்ளிட்ட உயிரினங்கள், மனிதர்களை கடிக்கும்போது, அவர்களுக்கு உண்ணி காய்ச்சல் ஏற்படுகிறது.
உடல் சோர்வு
பாதிப்பு ஏற்பட்டோருக்கு காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு உள்ளிட்டவற்றுடன் தடிப்புகள் போன்றவை முக்கிய அறிகுறிகளாக உள்ளன.
இப்பாதிப்பால் ஆண்டுதோறும் 4,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பெரும்பாலும் திருவண்ணாமலை, வந்தவாசி உள்ளிட்ட மலைப் பகுதியிலும், செடிகள் மண்டிய இடங்களில் வசிக்கும் மக்களிடையேயும் பாதிப்பு இருந்தது. தற்போது, சமவெளி பகுதியிலும், குறிப்பாக சென்னை போன்ற நகரப் பகுதிகளிலும், 'ஸ்கிரப் டைபஸ்' காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது.
9 பேர் உயிரிழப்பு
தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திராவில், 1,592 பேருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சித்துார் மாவட்டத்தில் மட்டும் 420 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒன்பது பேர் வரை இந்த காய்ச்சலால் உயிரிழந்து இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், உண்ணி காய்ச்ச லால் உயிரிழப்பு ஏற்படவில்லை என அம்மாநில அரசு மறுத்துள்ளது.
இதற்கிடையே, தமிழகத்திலும் உண்ணி காய்ச்சலால், தினசரி ஐந்து முதல் 10 பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

