அமெரிக்காவுக்கு மாற்றாக இலங்கையுடன் வர்த்தகம் 'பெடக்சில்' தலைவர் தகவல்
அமெரிக்காவுக்கு மாற்றாக இலங்கையுடன் வர்த்தகம் 'பெடக்சில்' தலைவர் தகவல்
ADDED : ஆக 09, 2025 02:15 AM

பல்லடம்:''அமெரிக்காவுக்கு மாற்றாக இலங்கையுடன் வர்த்தகத்தை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது'' என்று, விசைத்தறி ஏற்றுமதி மற்றும் மேம்பாட்டு கவுன்சில் (பெடக்சில்) தலைவர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.
இலங்கை தலைநகர், கொழும்புவில், அந்நாட்டின் உயர்நிலை கவர்னர் சுனில் ஹந்துன் நெட்டி உடனான சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் கூறியதாவது:
இந்தியா -- இலங்கை இடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் நோக்கத்தில், இலங்கை பயணம் மேற்கொள்ளப்பட்டது. இந்திய துணி ஏற்றுமதியை, இலங்கைக்கு விரிவுபடுத்தும் வழிகளைப் பற்றியும், இந்திய விசைத்தறி துணிகள், ஜவுளிகளின் தரம், வகைகள், விலை மற்றும் போட்டித் திறன் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்திய துணிகள், 'மேட்-அப்' ஆகியவற்றின் இறக்குமதியை அதிகரித்தல், நேரடி வணிகம் மற்றும் வாங்குபவர்- விற்பவர் சந்திப்புகள், வர்த்தக கண்காட்சியில் இரு நாட்டினர் பங்கேற்பு, லாஜிஸ்டிக்ஸ் மற்றும் சந்தை அணுகல் மேம்பாடு ஆகியவை குறித்து கலந்துரையாடப்பட்டது. இரு நாடுகளின் வணிகத்தை மேம்படுத்தவும், தொழில் ரீதியான ஒத்துழைப்புகளை வலுப்படுத்தவும், புதிய ஏற்றுமதி வாய்ப்புகளை அதிகரிக்கவும் ஆலோசிக்கப்பட்டது.
அமெரிக்காவின் வரி விதிப்பு காரணமாக, விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் பாதிக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசுடன் இணைந்து, 'பெடக்சில்' மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, இலங்கையுடனான வர்த்தகத்தை மேம்படுத்த திட்டமிடப்பட்டது. அமெரிக்க வர்த்தகத்துக்கு மாற்றாக இது அமையும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
'பெடக்சில்' துணைத் தலைவர் சந்திரசேகர், ஏற்றுமதி குழு ஒருங் கிணைப்பாளர் பாரத் சர்ச்சாகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.