ADDED : மார் 18, 2024 07:21 AM
உசிலம்பட்டி : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சுகப்பிரசவத்தில் பிறந்த பெண்சிசு, மூன்றாம் நாளில் இறந்தது குறித்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
செல்லம்பட்டி அருகே சடச்சிபட்டியைச் சேர்ந்தவர் ராணுவவீரர் ரஞ்சித் 33, இவரது மனைவி வஞ்சியம்மாளுக்கு 25, கடந்த 3 தினங்களுக்கு முன் உசிலம்பட்டி அரசு மருத்துமனையில் 2 வதாக சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை தாய்ப்பால் குடிக்காததால் மருத்துமனையிலேயே வைத்து சிகிச்சை அளித்தனர்.
இந்த நிலையில் குழந்தையின் உடல் அசைவற்றிருந்ததால், டாக்டர்கள் பரிசோதனை செய்த போது உயிரிழந்திருப்பது தெரியவந்தது. தலைமை டாக்டர் கொடுத்த புகாரின் பேரில் உசிலம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். 'பிரேத பரிசோதனை நடத்தி இறப்பிற்கான காரணம் தெரிந்த பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என போலீசார் தெரிவித்தனர்.

