ADDED : ஜன 09, 2024 02:52 AM

மூணாறு: இடுக்கி மாவட்டம் பூப்பாறை அருகே பன்னியாறு எஸ்டேட்டில் காட்டு யானை தாக்கியதில் தேயிலை தோட்ட பெண் தொழிலாளி பரிமளம் 44, பலியானார்.
இப்பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு நேற்று காலை 7:45 மணிக்கு பரிமளம், பழனியம்மாள் ஆகியோர் பச்சை தேயிலை பறிக்கச் சென்றனர். பன்னியாறு, பத்தடிகுளம் இடையே சென்ற போது ஆறு காட்டு யானைகளைக் கொண்ட கூட்டத்திடம் சிக்கினர். அவற்றிடம் இருந்து தப்ப எண்ணி இருவரும் ஓடிய போது காட்டு யானை ஒன்று பரிமளத்தை துதிக்கையால் பலமாக தாக்கியது.
அதில் தலை, கை உட்பட உடலில் பல பகுதிகளில் காயமடைந்தவர் நிலைகுலைந்த கீழே விழுந்தார். அந்த வழியில் வந்த வேறு தொழிலாளர்கள் கூச்சலிட்டு யானைகளை விரட்டினர். பலத்த காயமடைந்த பரிமளத்தை மீட்டு ராஜகுமாரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்கு தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியில் இறந்தார். சாந்தாம்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.