வருவாய்க்கு அதிகமாக சொத்துக்களை வாரிக்குவித்த பெண் அதிகாரி; ரெய்டில் சிக்கியவை ஏராளம்!
வருவாய்க்கு அதிகமாக சொத்துக்களை வாரிக்குவித்த பெண் அதிகாரி; ரெய்டில் சிக்கியவை ஏராளம்!
ADDED : ஜூலை 24, 2025 06:57 AM

பெங்களூரு: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், பெண் ஐ.ஏ.எஸ்., உட்பட எட்டு அரசு அதிகாரிகளின் வீடு, அலுவலகங்களில் லோக் ஆயுக்தா போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். எட்டு அதிகாரிகளும் 37.41 கோடி ரூபாய்க்கு, சொத்து குவித்தது தெரியவந்துள்ளது.
கர்நாடகாவில் வருமானத்திற்கு அதிகமாக, சொத்து சேர்க்கும் அரசு அதிகாரிகள் வீடு, அலுவலகங்களில் லோக் ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தி நகை, பணம், சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்வது வழக்கம்.
இந்நிலையில், பெங்களூரு ரயில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவன சிறப்பு துணை கமிஷனரான, ஐ.ஏ.எஸ்., அதிகாரி வசந்தி அமர், பெங்களூரு மாநகராட்சியின் சி.வி.ராமன்நகர் மண்டல நிர்வாக இன்ஜினியர் யரப்பா ரெட்டி, பெங்களூரு எம்.எஸ்., பில்டிங்கில் உள்ள நகர திட்டமிடல் துறை அலுவலக உதவி இயக்குநர் பாகலி மாருதி.
மைசூரு மாநகராட்சி நிர்வாக அலுவலக ஊழியர் வெங்கடராமா, துமகூரில் உள்ள கர்நாடக தொழில்பகுதி மேம்பாட்டுக் கழக உதவி நிர்வாக இன்ஜினியர் ராஜேஷ், கலபுரகியில் சுகாதாரத் துறை அதிகாரி சுனில் குமார், கொப்பால் தொழில்துறை மைய துணை இயக்குநர் சேக்கு சவுஹான், குடகில் உள்ள திறன் மேம்பாட்டுக் கழக இணை இயக்குநர் மஞ்சுநாத சாமி ஆகிய எட்டு பேரும், தங்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக, லோக் ஆயுக்தா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில், எட்டு அதிகாரிகளின் வீடு, அலுவலகங்களில் நேற்று காலை 6:00 மணி முதலே ஒரே நேரத்தில் சோதனை துவங்கியது. பெங்களூரு, மைசூரு, துமகூரு, கலபுரகி, கொப்பால், குடகு ஆகிய 6 மாவட்டங்களில் 41 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையின்போது கணக்கில் வராத கட்டு கட்டாக பணம், தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள், விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் சிக்கின. சொத்து, நிலம் வாங்கி குவித்ததற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. மாலை 6:00 மணி வரை சோதனை நடந்தது.
சோதனைக்கு பின் எட்டு அதிகாரிகள் வீடுகளின் இருந்து 37 கோடியே 41 லட்சத்து 52,996 ரூபாய் மதிப்பிலான பணம், நகை, வாகனம், சொத்து ஆவணங்கள், மற்றவை என அசையும், அசையா சொத்துகள் சிக்கியதாக, லோக் ஆயுக்தா தெரிவித்துள்ளது.
பெங்களூரு வடக்கு சிறப்பு துணை கமிஷனர் - 3 பதவியில் இருந்தபோது, வசந்தி அமர், தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தாசனபுராவில் 10 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக விடுவித்ததாக அவர் மீது, சமூக ஆர்வலர் பிரசாந்த் அளித்த புகார் அளித்தார். நீதிமன்ற உத்தரவின்படி கடந்த 16ம் தேதி வசந்தி அமர் மீது, ஹலசூரு கேட் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சிக்கியது என்ன?
அதிகாரிகள் பெயர்- மொத்த மதிப்பு (ரூபாய்)
1. வசந்தி அமர்- 9,02,66,390
2. யரப்பா ரெட்டி - 2,62,64,700
3. பாகலி மாருதி - 6,34,72,450
4. வெங்கடராமா- 3,71,59,138
5. ராஜேஷ்- 3,67,73,303
6. சுனில்குமார்- 4,34,23,897
7. சேக்கு சவுஹான் - 2,47,54,218
8. மஞ்சுநாதசாமி - 5,20,38,900
மொத்தம்- 37,41,52,996