கடத்தல் வாகனத்தை விடுவிக்க ரூ.30,000 லஞ்சம்; கடையம் பெண் இன்ஸ்பெக்டர் கைது
கடத்தல் வாகனத்தை விடுவிக்க ரூ.30,000 லஞ்சம்; கடையம் பெண் இன்ஸ்பெக்டர் கைது
ADDED : ஏப் 12, 2025 03:24 PM

தென்காசி: கடத்தல் வாகனத்தை விடுவிப்பதற்காக ரூ.30,000 லஞ்சம் வாங்கிய தென்காசியின் கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதாவை லஞ்ச ஒழப்புத்துறையினர் கைது செய்தனர்.
நெல்லை பணகுடியைச் சேர்ந்த விவசாயி மணி என்பவரது மகன் செல்வகுமார். இவர் மீது தென்காசி மாவட்டம் கடையம் போலீஸ் ஸ்டேசனில் ஆள்கடத்தல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நிபந்தனை ஜாமின் பெற்ற செல்வ குமார், கடையம் போலீஸ் ஸ்டேசனில் தினமும் கையெழுத்திட்டு வந்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக நேற்று இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதாவை செல்வகுமார் சந்தித்து பேசியுள்ளார். அப்போது, ரூ.30,000 லஞ்சம் கொடுத்தால், கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை விரைந்து வெளியே எடுத்து தருவதாக இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதா தெரிவித்துள்ளார்.
லஞ்சப்பணத்தை கொடுக்க விரும்பாத செல்வகுமார், தென்காசி லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் கொடுத்துள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறையின் அறிவுறுத்தலின் பேரில், ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுக்களை இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதாவிடம் அவர் கொடுத்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த பால்குதா தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறையினர், இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

