பெண் கொலை பற்றி அவதூறு: அண்ணாமலை மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு
பெண் கொலை பற்றி அவதூறு: அண்ணாமலை மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு
ADDED : ஏப் 22, 2024 05:42 PM

சென்னை: லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவின்போது கடலூரில் பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, திமுக கூட்டணிக்கு ஓட்டளிக்காததால் பெண் அடித்து கொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். தவறான தகவல் தெரிவித்ததாக அண்ணாமலை மீது கடலூர் போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே பக்கிரிமானியம் கிராமத்தில் ஏப்.,19ல் லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவின்போது, அதே கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் அவரது மனைவி கோமதி (45) என்பவர்களுக்கும், திமுக பிரமுகர்களான சேதுராமன் மகன் ரவி, அவரது ஆதரவாளர் கலைமணி ஆகியோருக்கும் இடையே ஏற்கனவே இருந்த முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் தலையில் பலத்த காயமடைந்த கோமதி, சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
வழக்குப்பதிவு
இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டிய தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 'தேர்தலில், தங்கள் கூட்டணிக்கு ஓட்டளிக்கவில்லை என்பதற்காக திமுக.,வினர் இந்த பாதக செயலை செய்திருப்பதாக' செய்தி வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் பெண் இறப்பு குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான கருத்து தெரிவித்ததாக அண்ணாமலைக்கு எதிராக புகாரளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தவறான தகவல் தெரிவித்ததாக அண்ணாமலை மீது கடலூர் போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

