புயல் வரலாற்றில் இது புதுசு! 500 கி.மீ. தொலைவை மெதுவாக கடந்த பெஞ்சல்
புயல் வரலாற்றில் இது புதுசு! 500 கி.மீ. தொலைவை மெதுவாக கடந்த பெஞ்சல்
ADDED : டிச 03, 2024 08:49 AM

சென்னை: தமிழக புயல் வரலாற்றில் 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் 500 கி.மீ., தொலைவை பெஞ்சல் மிக மெதுவாக கடந்துள்ளது.
சென்னை, வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் சென்னை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களை பதம் பார்த்தது. பின்னர் அங்கிருந்து மேற்கு நோக்கி நகர்ந்து, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களிலும் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.
புயலால் உருவான மழையால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தற்போது மழை இல்லாவிட்டாலும் மக்கள் இயல்பு வாழ்க்கையை இன்னமும் தொடங்கவில்லை.
இந்நிலையில் பெஞ்சல் புயல் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. 50 ஆண்டுகால தமிழக புயல் வரலாற்றில் இது போன்றதொரு மெதுவாக நகர்ந்து, கரை கடந்த புயல் இல்லை என்று வானிலை ஆய்வாளர்கள் கூறி உள்ளனர்.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தில் நீண்ட காலம் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் கூறியதாவது; பொதுவாக புயல்கள் எப்போதும் 250 கி.மீ. முதல் 300 கி.மீ., வரை 10 முதல் 12 கி.மீ., வேகத்தில் பயணிக்கும். ஆனால் பெஞ்சல் புயல் 3 கி.மீ., வேகத்தில் தான் பயணித்தது.
500 கி.மீ., தூரத்தை கடக்க 5 நாட்கள் எடுத்துக் கொண்டுள்ளது. புயல்கள் அது உருவான நாளில் இருந்து 3வது நாளில் வலுவிழக்கும். ஆனால் நவம்பர் 25ம் தேதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான 4 நாட்கள் கழித்து, அதவாது நவம்பர் 29ம் தேதிதான் புயலாக உருமாறியது.
கடந்த 50 ஆண்டுகால தமிழக புயல் வரலாற்றில், இப்படி மெதுவாக நகரும் ஒரு புயல் இருந்தது இல்லை. பொதுவாகவே, கடற்கரை பகுதியில் இருந்து ஒரு புயல் கடந்து விட்டால் அது வலுவிழக்கும்.
ஆனால், 9 மணி நேரம் ஒரே இடத்தில் நிலைகொண்டு, கடலில் உள்ள ஈரப்பதத்தை நன்றாக உள்வாங்கிக் கொண்டு அதன் பின்னரே மெதுவாக கரை கடக்க ஆரம்பித்து இருக்கிறது. அதிக மழைப் பொழிவை பல மாவட்டங்கள் எதிர்கொண்டதற்கு இதுவே காரணம் எனலாம். வானிலை தரவுகளை மேம்படுத்தப்பட்ட முறையில் கணிக்க, சரியான சிஸ்டம் நம்மிடம் இல்லை என்பதையே இது காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, அரபிக்கடலை நோக்கி பெஞ்சல் புயல் நகரும் போது, திருப்பத்தூர் முதல் தேனி வரை உள்ள 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையமானது, விடுத்திருந்தது, குறிப்பிடத்தக்கது.