வேளாண் அமைச்சரின் மாவட்டத்திலேயே உரத்தட்டுப்பாடு: அன்புமணி குற்றச்சாட்டு
வேளாண் அமைச்சரின் மாவட்டத்திலேயே உரத்தட்டுப்பாடு: அன்புமணி குற்றச்சாட்டு
ADDED : அக் 13, 2025 01:14 AM

சென்னை: 'வேளாண்துறை அமைச்சரின், சொந்த மாவட்டமான கடலுாரிலேயே, உரத்தட்டுப்பாடு ஏற்பட்டும், தி.மு.க., அரசு நடவடிக்கை எடுக்கவில்லை' என, பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:
காவிரி டெல்டா மாவட்டங்களிலும், கடலுாரிலும், யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ், காம்ப்ளெக்ஸ் உட்பட, அனைத்து உரங்களுக்கும் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால், சம்பா, தாளடி பயிர்களுக்கு, உரம் வைக்க முடியாமல், விவசாயிகள் தவித்து வருகின்றனர். விவசாயிகளின் துயரத்தை அறிந்து, நடவடிக்கை எடுக்க வேண்டிய தி.மு.க., அரசு, குறட்டை விட்டு துாங்கிக் கொண்டிருக்கிறது.
சில தனியார் கடைகளில், உரம் கிடைத்தாலும், 300 ரூபாய்க்கு ஒரு மூட்டை யூரியா வாங்கினால், 200 ரூபாய் மதிப்புள்ள, சத்து குருணை வாங்க வேண்டும் என, கட்டாயப்படுத்துகின்றனர். இது விவசாயிகளுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது.
உரத்தட்டுப்பாட்டை போக்குவதிலும் தமிழக அரசு தோல்வி அடைந்து விட்டது. வேளாண் துறை அமைச்சரின், சொந்த மாவட்டமான கடலுாரிலேயே, உரத்தட்டுப்பாடு நிலவுகிறது.
ஆனாலும், எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, உர விலையை குறைக்கவும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக உரங்களை வழங்கவும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.