ADDED : அக் 09, 2025 01:53 AM
சென்னை:கூட்ட நெரிசலை பயன்படுத்தி, செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் பண்டிகை கால திருடர்கள், போலீசாரின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில், பஸ், ரயில்கள், வணிக வளாக பகுதிகளில், நகை பறிப்பு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் திருடர்கள் அதிகம் பேர் உள்ளனர்.
கூட்ட நெரிசலில் எப்படி பொது மக்களின் கவனத்தை திசை திருப்ப வேண்டும்; போலீசாரிடம் மாட்டிக் கொள்ளாமல் தப்பிப்பது எப்படி என்பது போன்ற பயிற்சியை பெற்றுள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இவர்கள் போலீசாரின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
அத்துடன், செயின், மொபைல் போன் பறிப்பு, பெண்களின் தாலி செயினை அறுத்த வழக்கில் சிக்கிய நபர்கள் என, 8,000 பேரின் படங்களுடன் எச்சரிக்கை செய்யும் 'போஸ்டர்'கள் அச்சடித்து உள்ளோம்.
இவற்றை பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒட்ட வேண்டும் என, காவல் நிலைய போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.