ADDED : அக் 29, 2024 04:11 AM
சென்னை: தமிழகத்தில் கொடுமணல், கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் அழகன்குளத்தில், 'கள அருங்காட்சியகம்' அமைக்கும் பணியில், தொல்லியல் துறை ஈடுபட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமணல் என்ற ஊர், சங்க காலத்தில் கொடுமணம் என்ற பெயரில் இருந்துள்ளது. இது, சேரர்களின் தலைநகரான கரூரை, மேற்கு கரையுடன் இணைக்கும் வணிகப்பகுதியாக இருந்துள்ளது.
ஆதாரம்
இங்கு, தமிழக தொல்லியல் துறை ஆய்வு செய்ததில், இரும்பு காலம், வரலாற்று துவக்க காலம், சங்ககாலம் போன்ற காலகட்டங்களில் மனிதர்கள் வாழ்ந்தது, அகழாய்வின் வாயிலாக தெரியவந்தது.
இங்கு, இரும்பு வாள், பலரக மணிகள், எகிப்து, ரோம் நாடுகளுடன் வணிக தொடர்பு கொண்டிருந்ததற்கான ஆதாரமாக தங்கம், வெள்ளி நாணயங்கள், சங்க காலத்தை சேர்ந்த தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் உள்ளிட்ட தொல்பொருட்கள் கிடைத்தன.
இவற்றை, அப்பகுதியிலேயே காட்சிப்படுத்தும் வகையில், ஈரோடு நகர பகுதியில் இடம் தேர்வுசெய்யும் பணியில், தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.
அதேபோல், அரியலுார் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம், பிற்கால சோழர்களின் தலைநகராக இருந்த ஊர். இங்கும் தமிழக தொல்லியல் துறை அகழாய்வு செய்து, ராஜேந்திர சோழனின் அரண்மனை பகுதிகளை கண்டறிந்துள்ளது.
மேலும், அதைச் சுற்றிய பகுதிகளில் பல்வேறு தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.
அவற்றை காட்சிப்படுத்தும் வகையில், கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் அருகில் உள்ள ஹிந்து சமய அறநிலையத் துறையின் நிலம் பெறப்பட்டுள்ளது.
மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கோவில் உள்ளதால், அத்துறையின் ஒப்புதலை பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இறுதி கட்டம்
ராமநாதபுரம் மாவட்டத்தில், அழகன்குளத்திலும் தொல்லியல் துறை அகழாய்வு செய்தது. அங்கு, துளையிடப்பட்ட ஓடுகள், தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மண்பாண்டங்கள், சங்ககால செங்கற்கள், ரோம் நாட்டு நாணயங்கள் உள்ளிட்டவை கிடைத்தன.
சங்க கால பாண்டியர்களின் துறைமுக நகராக கருதப்படும் இங்கு கிடைத்த தொல்பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில், ராமேஸ்வரம் கோவிலுக்கு அருகில் கள அருங்காட்சியகம் அமைக்க, தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது.
இதற்கான நிலம் தேர்வு செய்யும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

