'பைல்ஸ் - 3' தமிழக அரசை புரட்டிப்போடும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தகவல்
'பைல்ஸ் - 3' தமிழக அரசை புரட்டிப்போடும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தகவல்
ADDED : டிச 10, 2024 07:45 PM

நாகப்பட்டினம்:''வேறொரு துறையில் சாதனை படைத்து விட்டு விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். நீண்ட அரசியல் பாதையில் நிறைய விஷயங்களை பார்க்க வேண்டும். கற்றுக் கொள்ள வேண்டும்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.
நாகையில், அவர் அளித்த பேட்டி:
சீனாவில் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய மூலப்பொருட்கள் உள்ளன. அதேபோல் மத்திய அரசும், நமக்கு தேவையான மூலப்பொருட்களுக்காக, மதுரை அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மாநில அரசிடம் கேட்டது. மாநில அரசும் தன்னுடைய கருத்தை பிப்., மாதம் தெரியப்படுத்தியுள்ளது.
இந்த சுரங்கம் அமைக்க வேண்டாம்; முயற்சியை கைவிடுங்கள் என எங்கும் கூறவில்லை. சுரங்கம் அமைக்க திட்டமிட்ட இடத்துக்கு அருகில் பண்டைய கால தமிழர்களின் அடையாளம் இருப்பதை, மத்திய அரசுக்கு மாநில அரசு எடுத்துக் கூறவில்லை. டிச., 1ம் தேதி, நான், லண்டனில் இருந்து தமிழகம் வந்த பின், இது தொடர்பான கோரிக்கையை மக்கள் என்னிடம் வைத்தனர்.
மக்களுக்கு வேண்டாம் என்ற எந்த திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தாது. ஆனால், திட்டத்தைக் கொண்டு வரும் நோக்கோடு செயல்பட்ட தி.மு.க., அரசு, இப்போது மக்கள் எதிர்ப்பு அதிகமாக இருக்கவும், அதில் இருந்து பின் வாங்குகின்றனர். திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுகின்றனர். இப்படித்தான், எல்லா விஷயங்களிலும் இரட்டை வேடம் போடுகிறது தி.மு.க., அரசு.
இதையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றனர். இதற்கெல்லாம் பதிலடி கொடுப்பது போல டிச., 12ல் நல்ல செய்தி வரும்.
ஏற்கனவே தி.மு.க., அரசின் ஊழல்களை தொகுத்து, இரு பைல்ஸ் வெளியிடப்பட்டிருக்கிறது. அடுத்ததாக, பைல்ஸ் - 3 வரும், 2025 துவக்கத்தில் வெளியிடப்படும். மத்திய அரசு, தமிழக அரசுக்கு 10 லட்சம் கோடி ரூபாய் கொடுத்துள்ளது. மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் 3 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட் போடுகின்றனர். செலவானது குறித்து மக்களுக்கு அரசு தான் கூற வேண்டும்.
மத்திய அரசின் டெண்டர் யார் எடுக்கின்றனர். நிறுவனம், பெயர், எத்தனை முறை எடுத்துள்ளனர். அவர்களுக்கும் தி.மு.க.வினருக்கும் தொடர்பு உள்ளதா? கூட்டணி கட்சிக்கு டெண்டர் போயுள்ளதா? அட்ஜஸ்மென்ட் நடந்துள்ளதா? என பைல்ஸ்-3 வெட்ட வெளிச்சமாக்கும். அகில இந்திய கட்சியின் முக்கிய தலைவர் எடுத்த டெண்டரும், அதன் வாயிலாக வெளிச்சத்துக்கு வெளிவரும். மாநில அரசு திட்டங்கள், எப்படி சில கட்சி தலைவர்கள் நடத்தும் நிறுவனங்களுக்கு போனது என்பதும் அதில் வெளிப்படும்.
என் மீது தொடரப்பட்ட மான நஷ்ட வழக்கு, 1200 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. பைல்ஸ் - 3, தமிழக அரசை புரட்டிப்போடும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.