திரைப்பட விருதுகள் அறிவிப்பு: நாளை விருது வழங்கும் விழா
திரைப்பட விருதுகள் அறிவிப்பு: நாளை விருது வழங்கும் விழா
ADDED : மார் 05, 2024 06:27 AM

சென்னை: கடந்த 2015ம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகளை, தமிழக அரசு அறிவித்துள்ளது. விருது வழங்கும் விழா நாளை(மார்ச் 6) சென்னையில் நடக்க உள்ளது.
சிறந்த படத்திற்கான முதல் பரிசுக்கு, தனி ஒருவன் படம்; இரண்டாம் பரிசுக்கு பசங்க 2 படம்; மூன்றாம் பரிசுக்கு பிரபா படம்; சிறப்பு பரிசுக்கு இறுதிச்சுற்று படம்; பெண்கள் குறித்து உயர்வாக சித்தரிக்கும் படத்திற்கான சிறப்பு பரிசுக்கு, 36 வயதினிலே படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
சிறந்த நடிகர் மாதவன்; சிறந்த நடிகை ஜோதிகா; சிறந்த நடிகர் சிறப்புப் பரிசு கவுதம் கார்த்திக்; சிறந்த நடிகை சிறப்பு பரிசு ரித்திகா சிங்; சிறந்த வில்லன் நடிகர் அரவிந்த்சாமி; சிறந்த நகைச்சுவை நடிகர் சிங்கம்புலி; சிறந்த நகைச்சுவை நடிகை தேவதர்ஷினி; சிறந்த குணச்சித்திர நடிகர் தலைவாசல் விஜய்.
சிறந்த குணச்சித்திர நடிகை கவுதமி; சிறந்த இயக்குனர் சுதா கொங்கரா; சிறந்த கதையாசிரியர் மோகன்ராஜா; சிறந்த உரையாடலாசிரியர் சரவணன்; சிறந்த இசை அமைப்பாளர் ஜிப்ரான்; சிறந்த பாடலாசிரியர் விவேக்; சிறந்த பின்னணிப் பாடகர் கானா பாலா; பின்னணிப் பாடகி கல்பனா ராகவேந்தர் என, 27 கலைஞர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசு எம்.ஜி.ஆர்., திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருது, ஐந்து பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுக்கு தேர்வானவர்களுக்கு, காசோலை, விருதாளர்கள் பெயர் பொறித்த தங்கப்பதக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
தமிழக அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், முத்தமிழ்ப் பேரவை, டி.என்.ராஜரத்தினம் கலையரங்கில், நாளை நடக்க உள்ளது.

