புலிகள் காப்பகத்தில் தடை மீறி படப்பிடிப்பு; உயர் அதிகாரிகள் அனுமதியால் சர்ச்சை
புலிகள் காப்பகத்தில் தடை மீறி படப்பிடிப்பு; உயர் அதிகாரிகள் அனுமதியால் சர்ச்சை
UPDATED : ஜூலை 23, 2025 05:06 AM
ADDED : ஜூலை 22, 2025 09:58 PM

வால்பாறை; ஆனைமலை புலிகள் காப்பகத்தில், விதிமுறையை மீறி குறும்படத்தின் படப்பிடிப்பு நடந்தது.
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வால்பாறையில், இயற்கை வளங்களையும், வனவிலங்குகளையும் பாதுகாக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், சமீப காலமாக வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரு வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில், விதிமுறை மீறல்கள் அதிகரித்துள்ளன. வால்பாறை வரும் சுற்றுலா பயணியர், ரிசார்ட்களில் தங்கி செல்கின்றனர். அங்கு தங்கும் சுற்றுலா பயணியர் இரவு நேரத்தில் வனவிலங்குளை காண டிரக்கிங் செல்வதும், 'ட்ரோன்' கேமரா பயன்படுத்துவதும் அதிகரித்து வருகிறது. இதை வனத்துறை அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை.
இந்நிலையில், நடுமலை ரோட்டில், குறும்படத்துக்கு ஷூட்டிங் நடத்துகின்றனர். புலிகள் காப்பக வனப்பகுதியில் படப்பிடிப்புகள் நடந்த ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் படப்பிடிப்பு நடப்பது பல்வேறு சர்ச்சைகளுக்கு வழிவகுக்கிறது.
வால்பாறை வனச்சரக அலுவலர் சுரேஷ்கிருஷ்ணாவிடம் கேட்ட போது, கடந்த மூன்று நாட்களாக சென்னையை சேர்ந்தவர்கள் குறும்படம் ஷூட்டிங் எடுக்கின்றனர். அவர்கள் உயர்அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுள்ளனர். அனுமதியின்றி யாரையும் சினிமா ஷூட்டிங் எடுக்கவோ, குறும்படம் எடுக்கவோ அனுமதிப்பதில்லை,' என்றார்.
வனப்பகுதியில் சினிமா மற்றும் குறும்படத்துக்கு ஷூட்டிங் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகத்தினுள் படப்பிடிப்பு மேற்கொள்ள விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக்கொள்ளப்பட்டதா என்பது தெரியவில்லை.
உயர் அதிகாரிகள் அனுமதி இருந்தால், தடை செய்யப்பட்ட எந்த பகுதியில் யார் வேண்டுமானாலும் படப்பிடிப்பு நடத்தலாம் என்ற நிலை உருவாகியுள்ளதால், சூழல் ஆர்வலர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.