பள்ளிகளில் 'ப' வடிவில் இருக்கை ஒரு வாரத்துக்கு பின் இறுதி முடிவு: அமைச்சர் மகேஷ் தகவல்
பள்ளிகளில் 'ப' வடிவில் இருக்கை ஒரு வாரத்துக்கு பின் இறுதி முடிவு: அமைச்சர் மகேஷ் தகவல்
UPDATED : ஜூலை 15, 2025 06:08 PM
ADDED : ஜூலை 15, 2025 06:46 AM

திருச்சி; ''பள்ளி வகுப்பறையில் மாணவர்களை, 'ப' வடிவத்தில் அமர வைப்பது குறித்து, ஒரு வாரம் கழித்து, முதன்மை கல்வி அலுவலர்களிடம் அறிக்கை பெற்று, இறுதி முடிவு எடுப்போம்,'' என, அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், 'ஓரணியில் தமிழகம்,' பரப்புரைக்காக, வார் ரூம் திறக்கப்பட்டது. பள்ளி கல்வித் துறை அமைச்சரும், தெற்கு மாவட்ட செயலருமான மகேஷ், அதை திறந்து வைத்தார்.
பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
யார் சொன்னால் செய்வார்கள்; யார் வெற்று அறிவிப்பு விடுவார்கள், என மக்களுக்கு நன்றாக தெரியும். நாங்கள் அறிவித்தால், அதை நிறைவேற்றுவோம் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருக்கிறது.
இனி யார் வந்து, 1,500 தருகிறோம், 3,000 தருகிறோம் என கூறினாலும், மக்கள் நம்ப மாட்டார்கள்.
பள்ளி வகுப்பறையில் மாணவர்களை, 'ப' வடிவத்தில் அமர வைப்பது சோதனை முயற்சி தான் என, ஏற்கனவே கூறியுள்ளோம். ஆசிரியர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடும் வகையில் தான், இத்தகைய சோதனை முயற்சியை முன்னெடுத்துள்ளோம். இது குறித்து, ஒரு வாரம் கழித்து, முதன்மை கல்வி அலுவலர்களிடம் அறிக்கை பெற்று, இறுதி முடிவு எடுப்போம்.
திருவாரூரில், அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்தது தொடர்பாக, விசாரணை நடைபெற்று வருகிறது. யார் அதை செய்திருந்தாலும், போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
பள்ளி வளாகங்களை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.