அரசியல் நிலை குறித்து டிச., 15ல் இறுதி முடிவு: பன்னீர்செல்வம் அறிவிப்பு
அரசியல் நிலை குறித்து டிச., 15ல் இறுதி முடிவு: பன்னீர்செல்வம் அறிவிப்பு
ADDED : நவ 25, 2025 05:36 AM

சென்னை: முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலான, 'அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு' மாவட்டச் செயலர்கள் ஆலோசனைக் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது.
கூட்டத்தில், குழுவின் பெயர் 'அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம்' என மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பேசியதாவது:
அ.தி.மு.க.,விற்காக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர், பெரும் தியாகம் செய்தனர். தனது மறைவிற்கு பிறகும், 'அ.தி.மு.க., தொடர்ந்து வெற்றிகளைப் பெற வேண்டும்; பல ஆண்டுகள் ஆட்சி செய்ய வேண்டும்' என, ஜெயலலிதா தனது எண்ணத்தை வெளிப்படுத்தினார்.
அவர் மறைவுக்கு பின், சுய நலவாதிகள், சர்வாதிகார போக்குடன், கட்சியை வழி நடத்தினர். அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து, பலமுறை நான் எடுத்து கூறியும், அவர்கள் கேட்கவில்லை.
தவறான அணுகுமுறை, தவறான பொதுக்குழு, செயற்குழு நடத்தி, தான்தோன்றித்தனமாக கட்சியை வழி நடத்தினர். இதனால், தமிழக மக்களின் அபிப்ராயம், நம்பிக்கை, ஆதரவை இழந்து விட்டோம்.
ஜெயலலிதா மறைவிற்கு பின், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது. அதை மாற்றி, நிர்வாகத்தை கையில் எடுத்து, தொண்டர்கள் கண்ணீர்விட்டு அழும் சூழலை உருவாக்கினர்.
அவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். இதற்காக, டிச.,15ம் தேதி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. இதில், கட்சி எவ்வாறு செயல்பட வேண்டும் என, இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.
தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில், அந்த முடிவு, அரசியல் வரலாற்றில், திருப்பு முனையாக இருக்கும்.
கட்சிக்கு என்ன நிலை ஏற்படுமோ என்ற கவலை, தொண்டர்களுக்கு உள்ளது. ஒருங்கிணைப்பு வாயிலாக, அதை மாற்றும் சக்தி நம்மிடம் உள்ளது.
எனவே, டிச.,15க்குள் தவறு செய்தவர்கள் திருந்த வேண்டும்; இல்லையென்றால், திருத்தப்படுவர். நாங்கள் முடிவு எடுக்கும் பாவத்தை நீங்கள் செய்யாதீர்.
இவ்வாறு பன்னீர்செல்வம் பேசினார்.
அ.தி.மு.க., தொண்டர்கள் மீட்பு உரிமைக் குழுவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் கூறுகையில், ''வரும் டிச., 15க்குள் அ.தி.மு.க., ஒன்றிணைக்க வேண்டும். இல்லையேல், புதிய கட்சி துவக்கப்படும்,'' என்றார்.

