கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி பலி 3 மாதத்தில் இறுதி அறிக்கை: ஐகோர்ட் உத்தரவு உயர் நீதிமன்றம் உத்தரவு
கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி பலி 3 மாதத்தில் இறுதி அறிக்கை: ஐகோர்ட் உத்தரவு உயர் நீதிமன்றம் உத்தரவு
ADDED : பிப் 13, 2025 11:44 PM
சென்னை:விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியைச் சேர்ந்தவர் கே.பழனிவேல், 34. இவரது மகள் லியாலட்சுமி, 4; அப்பகுதியில் உள்ள செயின்ட் மேரிஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில், எல்.கே.ஜி., படித்தாள்.
கடந்த மாதம் 3ம் தேதி, பள்ளி உணவு இடைவேளையில், அங்குள்ள கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தாள்.
இச்சம்பவம் குறித்து, சந்தேக மரணம் என, வழக்கு பதிந்த போலீசார், பள்ளி தாளாளர் எமில்டா, முதல்வர் டோம்னிக் மேரி, வகுப்பு ஆசிரியர் ஏஞ்சல் ஆகியோரை கைது செய்தனர்.
இந்நிலையில், இவ்வழக்கின் விசாரணையை, சி.பி.ஐ., அல்லது சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சிறுமியின் தந்தை பழனிவேல் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு, நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எம்.தினேஷ் ஆஜராகி, “புலன் விசாரணை சரியான பாதையில் செல்லவில்லை. குற்றம் சாட்டப்பட்ட பள்ளி தாளாளர், முதல்வர் உள்ளிட்டோர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். எனவே, வழக்கு விசாரணையை மாற்ற வேண்டும்,” என்றார்.
போலீசார் தரப்பில், அரசு வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன் ஆஜராகி, “டி.எஸ்.பி., தலைமையில் புலன் விசாரணை நடந்து வருகிறது. இதுவரை, 23 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். விசாரணை சரியான பாதையில் செல்கிறது. இந்த கட்டத்தில் வேறு அமைப்புக்கு மாற்றினால், அது விசாரணையை சீர்குலைக்கும்,” என்றார்.
அதை ஏற்ற நீதிபதி, 'வழக்கின் புலன் விசாரணையை விரைந்து முடித்து, விசாரணை நீதிமன்றத்தில், 12 வாரங்களுக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். சம்பவம் தொடர்பான கண்காணிப்பு கேமரா பதிவுகளை, இரண்டு வாரங்களுக்குள் பெற்றோருக்கு வழங்க வேண்டும்' என, போலீசுக்கு உத்தரவிட்டார்.
'விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்ற முகாந்திரம் இல்லை' எனக்கூறி, பழனிவேல் மனுவை தள்ளுபடி செய்தார்.