மத போதகரை தாக்கிய விவகாரம் சிறப்பு எஸ்.ஐ.,க்கு அபராதம் ரத்து
மத போதகரை தாக்கிய விவகாரம் சிறப்பு எஸ்.ஐ.,க்கு அபராதம் ரத்து
ADDED : ஆக 17, 2025 01:34 AM

சென்னை:மத போதகரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், சிறப்பு எஸ்.ஐ.,க்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் விதித்த, 20,000 ரூபாய் அபராதத்தை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், அந்திவாடி சோதனைச் சாவடி பகுதியைச் சேர்ந்த மத போதகர் ஆபிரகாம், தன் நண்பர்கள் பீட்டர், ஜெபசிங் ஆகியோருடன், மதம் தொடர்பான துண்டு பிரசுரங்களை, கடந்த 2019 பிப்., 28ல், கர்னுார் கிராம மக்களுக்கு வழங்கி கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த சிவகுமார், முருகன் ஆகியோர், ஆபிரகாம், அவரது நண்பர்களிடம் துண்டு பிரசுரங்களை கொடுக்கக் கூடாது என தகராறு செய்தனர்.
சம்பவ இடத்துக்கு சென்ற மத்திகிரி சிறப்பு எஸ்.ஐ., சங்கர், துண்டு பிரசுரங்களை வழங்கிய மத போதகர், அவரது நண்பர்களை அடித்து, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, அவர்களிடம் வெள்ளை காகிதத்தில் கையெழுத்து வாங்கியதாக கூறப்பட்டது.
இதுகுறித்து, ஆபிரகாம் அளித்த புகாரின்படி, மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தி, சிறப்பு எஸ்.ஐ.,க்கு, 20,000 ரூபாய் அபராதம் விதித்து, 2020 அக்., 3ல் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், சிறப்பு எஸ்.ஐ., சங்கர் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, நீதிபதிகள் எம்.சுந்தர், ஹேமந்த் சந்தன்கவுடர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன் ஆஜரானார்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'மனுதாரரான சிறப்பு எஸ்.ஐ., பிரச்னை ஏற்பட கூடாது என்பதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே, புகார்தாரரை அங்கிருந்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
'இதில், எந்த மனித உரிமை மீறலும் இல்லை. எனவே, மாநில மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது' என கூறப்பட்டுள்ளது.