மழை, வெயில்னு காலம் கடத்தாம கட்டுமான பணிகளை முடிங்க! பொதுப்பணித்துறையினருக்கு அமைச்சர் உத்தரவு
மழை, வெயில்னு காலம் கடத்தாம கட்டுமான பணிகளை முடிங்க! பொதுப்பணித்துறையினருக்கு அமைச்சர் உத்தரவு
ADDED : செப் 27, 2024 01:58 AM
சென்னை:''மழை, வெயில் என ஏதாவது காரணத்தை சொல்லி காலம் கடத்தக் கூடாது. அதற்கேற்ப கட்டுமானத் திட்டங்களை வகுத்து செயல்பட வேண்டும்,'' என, அதிகாரிகளுக்கு பொதுப்பணித் துறை அமைச்சர் வேலு உத்தரவிட்டுள்ளார்.
வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ள நிலையில், தொய்வின்றி கட்டுமான பணிகளை மேற்கொள்வது தொடர்பான ஆலோசனை கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. இதில், பொதுப்பணி துறை அமைச்சர் வேலு, செயலர் மங்கத்ராம் சர்மா, சிறப்பு பணி அலுவலர் விஸ்வநாத், திருச்சி மண்டல தலைமை பொறியாளர் செந்தில் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
விவாதம்
கடந்த மூன்று ஆண்டுகளில், முதல்வர் ஸ்டாலின் அறிவித்த திட்டங்கள், நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், நிலுவையில் உள்ள திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
அமைச்சர் வேலு பேசியதாவது:
எந்த கட்டுமானப் பணியாக இருந்தாலும் குறித்த காலத்திற்குள் முடிக்க வேண்டும். மழை, வெயில் என ஏதாவது காரணத்தை சொல்லி காலம் கடத்தக்கூடாது.
அதற்கேற்ப கட்டுமான திட்டங்களை வகுத்து செயல்பட வேண்டும். பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய கட்டடங்களை, அடிக்கடி பொறியாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.
தரக் கட்டுப்பாட்டு கோட்டப் பொறியாளர்கள், புதிய கட்டுமானப் பணிகளை அவசியம் ஆய்வு செய்ய வேண்டும். புதிய கட்டடங்கள் கட்டும் பணிகளுக்கு மதிப்பீடு தயாரிக்கும்போது, அவற்றை பயன்படுத்தவுள்ள துறையின் தேவையை கேட்டறிய வேண்டும்.
அதன்படி வரைபடம் தயாரிக்க வேண்டும். கட்டடம் கட்டுவதற்கு முன், மண் பரிசோதனை செய்ய வேண்டும்.
மண்ணின் தன்மைக்கு ஏற்றவாறு, கட்டடங்கள் உறுதித்தன்மையுடன் கட்ட வேண்டும். இதன் வாயிலாக, திருத்திய நிர்வாக அனுமதியை தவிர்க்க முடியும். 'எம் - சாண்ட்' சுவர் பூச்சுக்கு, தேவையான ரசாயன கலவையை பயன்படுத்த வேண்டும்.
ஜெயங்கொண்டம்
அரசின் பெயர் சொல்லும் பெரிய கட்டுமானப் பணிகளுக்கு பசுமை கட்டட வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். முதல்வர் அறிவித்துள்ள திருச்சி பிரமாண்ட நுாலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டுமானப் பணிகளை விரைந்து துவங்க வேண்டும்.
திருச்சியில் 110 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை சிறப்பு கட்டடம், தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லுாரியில் 42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புற்றுநோய் சிகிச்சை பிரிவு கட்டடம், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.