எப்.ஐ.ஆர்., வெளியான விவகாரம்: இன்ஸ்பெக்டரிடம் விசாரணை
எப்.ஐ.ஆர்., வெளியான விவகாரம்: இன்ஸ்பெக்டரிடம் விசாரணை
ADDED : ஜன 28, 2025 06:11 AM

சென்னை : பாலியல் புகார்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யும் போது, முதல் தகவல் அறிக்கை எனப்படும், எப்.ஐ.ஆர்., நகலானது, பாதிக்கப்பட்ட மற்றும் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும்.
அதிலுள்ள விபரங்கள், வெளிநபர்களுக்கு தெரியாதபடி ரகசியம் காக்க வேண்டும். ஆனால், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், எப்.ஐ.ஆர்., நகல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில், கோட்டூர்புரம் மகளிர் காவல் நிலைய போலீசார் தான், எப்.ஐ.ஆர்., பதிவு செய்தனர். அதனால், போலீசாரே, எப்.ஐ.ஆர்., நகலை வெளியிட்டு விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஆனால், சி.சி.டி.என்.எஸ்., எனப்படும் குற்றம் மற்றும் குற்றவாளிகள் கண்காணிப்பு இணையதளத்தில் பதிவேற்றம் செய்தபோது, தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாகவே எப்.ஐ.ஆர்., வெளியில் கசிந்ததாகவும் கூறப்பட்டது.
தற்போது, மாணவி பாலியல் வன்முறை வழக்கை, மூன்று பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்து வருகின்றனர்.
அவர்கள், எப்.ஐ.ஆர்., வெளியான விவகாரம் குறித்தும் விசாரிக்கின்றனர். முதலில் அவர்கள், அபிராமபுரம் காவல் நிலையத்தில் எழுத்தராக உள்ள போலீஸ்காரர் மருதுபாண்டியிடம் விசாரித்தனர்.
அவர், தான் தயார் செய்த எப்.ஐ.ஆர்., நகலை, அபிராமபுரம் இன்ஸ்பெக்டர் பிரதீப்பிடம் கொடுத்து விட்டதாக கூறியுள்ளார்.
சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள், பிரதீப்பிடம் நேற்று விசாரணை நடத்தினர். அடுத்ததாக, எப்.ஐ.ஆர்., நகலை பதிவிறக்கம் செய்த, 11 பேரிடமும் விசாரிக்க உள்ளனர்.

