செய்யாறு வெள்ளத்தில் சிக்கிய 7 பேரை மீட்ட தீயணைப்பு வீரர்கள்
செய்யாறு வெள்ளத்தில் சிக்கிய 7 பேரை மீட்ட தீயணைப்பு வீரர்கள்
ADDED : டிச 09, 2024 08:49 AM
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஆற்றில் தண்டரை பகுதியில் அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது.
இங்கு நீர் நிரம்பி, கால்வாய் வழியாக மாமண்டூர் ஏரிக்கு செல்லும். தண்டரை அணைக்கட்டு பகுதியில் நேற்று முன்தினம் மாலை, திருவத்திபுரம் மார்க்கெட் மற்றும் குடநகர் பகுதியை சேர்ந்த, 9 வாலிபர்கள் குளிக்க சென்றனர். நீரோட்டம் அதிகமுள்ள பகுதியில் குளித்த முபாரக், 20, அடித்து செல்லப்பட்டார்.
இதை பார்த்த மற்ற வாலிபர்கள் கரை மீது ஏறி கூச்சலிட்டனர்.
அப்போது தண்டரை கிராமத்தை சேர்ந்த ஐந்து வாலிபர்கள், அணைக்கட்டு அருகில் எறையூர் பாலத்தின் கீழ் இறங்கி, முபாரக்கை மீட்டு, பாலத்தின் அடியிலுள்ள மணல் திட்டில் கரையேறினர். நீரோட்டம் அதிகமாக இருந்ததால், வெளியேற முடியாமல் தவித்தனர்.
உடனடியாக செய்யாறு தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு சென்ற குழுவினர், வெள்ளத்தில் சிக்கி தவித்த முபாரக், 20, துாயவன், 18, விமல், 18, ராஜபிரியன், 17, விஜய், 16, நேதாஜி, 18, சுந்தர், 17, என ஏழு பேரையும் மீட்டனர்.