பழுதடைந்த உபகரணங்களால் சத்துணவு மையங்களில் தீ அரசு மவுனத்தால் ஊழியர்கள் ஆவேசம்
பழுதடைந்த உபகரணங்களால் சத்துணவு மையங்களில் தீ அரசு மவுனத்தால் ஊழியர்கள் ஆவேசம்
ADDED : ஏப் 24, 2025 04:59 AM
சென்னை:  சத்துணவு மையங்களில், 10 ஆண்டுகளுக்கு முன் பொருத்தப்பட்ட, காஸ் அடுப்பு, இணைப்பு குழாய் போன்றவை பழுதடைந்து உள்ளதால் தீ விபத்து ஏற்படுகிறது. இதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்காதது, சத்துணவு ஊழியர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம் முழுதும், 43,000க்கும் மேற்பட்ட சத்துணவு மையங்கள் உள்ளன. காலமுறை ஊதியம் என்பதே, இம்மையங்களில் பணிபுரியும், 60,000க்கும் மேற்பட்ட ஊழியர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
இந்நிலையில், தற்போது சத்துணவு மையங்களில், தீ விபத்து ஏற்படுவது, அவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வலியுறுத்தல்
கடந்த, 18ம் தேதி விருத்தாசலம் அடுத்த செம்பளக்குறிச்சி கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும்; 9ம் தேதி கடலுார் சத்துணவு மையத்திலும் தீ விபத்து ஏற்பட்டது.
'இச்சம்பவத்திற்கு காஸ் சிலிண்டரில் பொருத்தப்படும் ரெகுலேட்டர், காஸ் டியூப் போன்றவை பழுதாகி இருப்பதே காரணம்' என, தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.
பத்து ஆண்டுகளுக்கு முன் பொருத்தப்பட்ட, அடுப்பு, ரெகுலேட்டர், ரப்பர் குழாய் போன்றவையே தற்போதும் பயன்பாட்டில் உள்ளன. இதனால், தொடர்ச்சியாக சத்துணவு மையங்களில், தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. இவற்றை மாற்ற வேண்டும் என்று ஊழியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
சத்துணவு மையங்களில் தீ விபத்து ஏற்படுவதற்கு, உபகரணங்களில் ஏற்பட்டுள்ள பழுதே காரணம். புதிய உபகரணங்கள் கேட்டு விண்ணப்பித்தால், ஏற்கனவே பயன்படுத்திய பழைய அடுப்பினை அதிகாரிகள் வழங்குகின்றனர்.
வேதனை
தற்போது, காலை உணவு திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அடுப்புகளில், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட, பழைய உபகரணங்களே உள்ளன.
இவற்றை மாற்றித் தரக்கோரி, சமூக நலத்துறை அதிகாரிகளிடம் கூறியும், அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. எங்கள் நீண்ட கால கோரிக்கையை தான், அரசு ஏற்கவில்லை என்றால், மாணவர்கள் பாதுகாப்பு சார்ந்த கோரிக்கையையும், ஏற்க மறுப்பது வேதனையாக உள்ளது.
எனவே, அரசு ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், எளிதில் தீ பரவாத ஜாக்கெட்டினை, எங்களுக்கு வழங்க வேண்டும். அதேபோல், பழுதடைந்த பழைய அடுப்புக்கு பதிலாக, புதிய அடுப்பு மற்றும் இணைப்பு குழாய் வழங்க வேண்டும்.
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, ரெகுலேட்டர், காஸ் இணைப்பு குழாயை மாற்ற வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினார்.

